சபரிமலையில் தரிசனம் செய்த சசிகலா.. ‘எனக்கு கர்ப்பப்பை கூட இல்லை’ என உருக்கம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 05, 2019 06:37 PM
கேரளா: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கான தடை நீக்கம் செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு பல்வேறு வலதுசாரி அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு நடுவே, கடந்த புதன் கிழமை அன்று, அதிகாலை 3.45 மணி அளவில் இரண்டு பெண்கள் வெற்றிகரமாக சபரிமலை கோவில் சன்னிதானத்துக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தனர்.
அப்போது பக்தர்கள் யாரும் தங்களைத் தடுக்கவில்லை என்றும், சொல்லப்போனால் அவர்கள் உதவி செய்ததாகவும் அவர்கள் கூறினர். இதையே மேற்கோள் காட்டி பேசிய கேரள முதல்வர் பினராய் விஜயன், ‘உண்மையான பக்தர்கள் உதவிதான் செய்கிறார்கள். சங் பரிவார் அமைப்புகளே தடுக்கின்றன’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், சபரிமலை கோவிலுக்குள் அன்றைய அதிகாலை சென்ற சிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்களைத் தொடர்ந்து அதே நாளில் சசிகலா என்கிற மற்றொரு இலங்கை பெண்மணியும் தரிசனம் செய்துள்ளதாக பேட்டியளித்திருந்தார். அதில், தான் முறையாக விரதம் இருந்து ஐயப்பனை வழிபடவந்த பக்தை என்றும், தன்னை ’தீட்டு என்று சொல்கிறார்கள், ஆனால் கர்ப்பப் பை கூட நீக்கிவிட்டேன், அதற்கான சான்றிதழ்கள் கூட வைத்திருக்கிறேன்’ என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.
எனினும் 18 படிகளில் ஏற அனுமதியில்லாமல் கீழிருந்தபடியே தரிசனம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இதனை நம்ப மறுத்த வலதுசாரி அமைப்புகள், உணமையில் இந்த பெண்கள் ஐயப்பனை நேருக்கு நேர் தரிசனம் செய்துவிட்டார்கள் என்று கூறி ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்திக்கொண்டு வருகின்றனர்.
ஆனால் கேரள போலீஸார் தரப்பில் இருந்து, சசிகலா உட்பட இதுவரை 10 பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபோன்ற தகவல்கள், சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு பெண்களை தூண்டிவிடும் நோக்கில் பொய்யாக வெளியிடப்படுவதாக சபரிமலை கர்ம சமிதி அமைப்பு தெரிவித்துள்ளது.