'சென்னையை ஏமாற்றிய பருவமழை'...தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 23, 2018 04:20 PM
சென்னையில் வடகிழக்கு பருவமழையானது சராசரி அளவை விட குறைவாக பெய்துள்ளதாக,மழை நிலவரம் குறித்து முகநூலில் எழுதிவரும்,வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள அவர் "‘தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலான மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கடுமையான மழை பொழிவு இருக்க வாய்ப்பில்லை. சென்னையில் இன்று விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் இதற்கு மேல் மழை பொழிவு இருக்காது.
இதுவரை வட கிழக்கு பருவமழை மூலம் சென்னைக்கு 350 மி.மீ மழைதான் கிடைத்திருக்கிறது.இது சராசரியான 850 மி.மீ அளவை விட மிகக் குறைவானது. டிசம்பரில் மட்டும் 500 மி.மீ மழை பொழியும் என்று எதிர்பார்ப்பது கடினம்.அதே நேரத்தில் பருவமழை முடியும் முன்னர் சென்னைக்கு குறைந்தபட்சம், சராசரி மழையாவது பொழியும் என்று நம்புவோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் வழக்கமான அளவை விட இந்த ஆண்டு குறைவாகவே மழை பொழிந்துள்ளதால், வரும் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.