இதுதான்பா ‘தலைவர்’-இன் நிஜமான பர்த்டே ‘பார்ட்டி’!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 12, 2018 10:58 AM
Superstar Rajinikanth\'s first Bday after he entered into politics

1950-ஆம் ஆண்டு டிசம்பர், 12-ஆம் தேதி, கர்நாடகாவின் மைசூர் பகுதியில் வசித்த மராத்தி குடும்பத்தில் போலீஸ் கான்ஸ்டபிளின் மகனாய் பிறந்து வீட்டுக்குள் மராத்தியும் வெளியில் கன்னடமும் பேசி வளர்ந்தபோது, அவரை எல்லோருக்கும் சிவாஜி ராவோ கேக்வேடு என்றுதான் தெரிந்திருக்கும். பின்னாளில் ரஜினிகாந்த் என மலர்ந்து ரஜினியாக வளர்ந்து சூப்பர் ஸ்டாராக மேலெழும்பி, 6 தமிழ் படங்களுக்கான விருதுகள், 4 சிறந்த நடிகருக்கான விருதுகள், இந்தியாவின் தலைசிறந்த பத்மபூஷன்(2000) , பத்மவிபூஷன் (2016) , 45வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த நூற்றாண்டின் கவனிக்கத்தக்க கலைஞன் போன்ற விருதுகளைக் குவிப்பார் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.

 

1973-ல் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து நடிப்புக்கான பட்டய படிப்பு படிப்பதற்கு முன்புவரை, அந்த இளைஞரை கார்பெண்டராகவும், தினக்கூலியாகவும் பெங்களூர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்க்கு உட்பட்ட பேருந்தில் பயணித்த மக்களுக்கு கண்டெக்டராகவும்தான் தெரிந்திருக்கும். பின்னாளில் அவர் நடித்த சிவாஜி (2007) திரைப்படத்துக்காக வாங்கிய சம்பள தொகை, அன்றைய தினத்தில் ஆசியாவிலேயே ஜாக்கி சானுக்கு அடுத்தபடியான அதிகம் என்பதை யாரும் யூகித்திருக்க மாட்டார்கள். 

 

தொப்பி முனியப்பாவின் கன்னட புராண காலத்து நாடகங்களில் வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்த அந்த இளைஞரை ஒரு நாடக நடிகராகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். பின்னாளில் கே.பாலச்சந்தர் எனும் இயக்குநர் சிகரத்தால் கவனிக்கப்பட்டு, அவருடைய இயக்கத்திலேயே தமிழில் அபூர்வ ராகங்கள் (1975) படத்தில் அறிமுகமாகி,  தமிழில் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் சூப்பர் ஸ்டாராக பரிமளத்து, பின்னாளில் அமெரிக்க படமான பிளட்ஸ்டோன் (1988) வரை நடித்திருப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

 

அண்மையில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 2.O படத்தில்  ‘ஐம் தி ஒன்லி ஒன்.. தி சூப்பர் ஒன்’ என்று பேசியது போலவே, நடிகர், அரசியல்வாதி என பல பிம்பங்களைக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’தின் 69வது பிறந்த தினத்தை (டிசம்பர் 12, 2018) அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, இந்திய சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் #HBDThalaivar #HBDSuperstarRajinikanth போன்ற ஹேஷ்டேகுகளின் கீழ் ட்வீட்டுகள் போட்டு கொண்டாடி வருகின்றனர். 

 

படையப்பா படத்தில் ரஜினி பார்ட்டியைத் தொடங்கலாம் என்று சொன்னதும் அனைவரும் காலில் விழப்போக, ரஜினி இடைமறித்து, ‘அட பர்த்டே பார்ட்டியச் சொன்னேன்பா’ என்பார். அதன்படி, உண்மையில் ரஜினி முழு அரசியலுக்கு வந்த பிறகான முதல் பர்த்டே பார்ட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதுமட்டுமல்லாமல், ரஜினியின் பிறந்த தினமான இதே நாளில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் டீசரும் வெளியாகியுள்ளதால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

Tags : #RAJINIKANTH #HBDRAJINIKANTH #HBDTHALAIVAR #SUPERSTAR #ACTOR #POLITICIAN