கடவுளின் தேசத்தை தொடர்ந்து துரத்தும் சோகம்...இதுவரை 15 பேர் பலி!
Home > News Shots > தமிழ்By Jeno | Sep 03, 2018 01:04 PM
கேரளாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத மழை கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது.வெள்ளத்தால் 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின. மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.பல ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. 200-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்துள்ளன. இதுதவிர, கன மழைக்கு அம்மாநிலத்தில் 476 பேர் பலியாகியுள்ளனர்.இதிலிருந்து மீள்வது கேரளாவிற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.பல மாநில அரசுகள்,பல அமைப்புகள் என பலதரப்பில் இருந்தும் உதவிகள் வந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் வெள்ள பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த பாதிப்பாக தற்போது எலிக் காய்ச்சல் மிரட்டி வருகிறது.வேகமாகப் பரவும் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், கேரள அரசு அந்த மாவட்டங்களில் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.
மழையின் பாதிப்புக் குறைவாக இருந்த கோழிக்கோடு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 4 லட்சம் பேருக்குத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறையினர் திகைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இருவர் எலிக்காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் இதுவரை 15பேர் எலிக்காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். அதனால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்ச்சலை கட்டுப்படுத்த அரசு சார்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.