'அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா'?...யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது?
Home > News Shots > தமிழ்By Jeno | Jan 29, 2019 10:33 PM
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்,முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி.முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய தோனி, தசைப்பிடிப்பு காரணமாக மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை. இது ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது.
நீண்ட ஆண்டுக்கு பிறகு உடல் நிலை காரணமாக தோனி போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 2003ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் தோனி,முதல்முறையாக வைரல் காய்ச்சல் காரணமாக அயர்லாந்து-தென்னாப்ரிக்கா தொடரில் விளையாட முடியாமல் போனது.பின்னர் கடந்த 2007ம் ஆண்டு தசை பிடிப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தசைப்பிடிப்பு காரணமாக அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. இது ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தாலும்,உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க நிச்சயம் தோனிக்கு ஓய்வு தேவை என்ற கருத்தும் எழுந்துள்ளது.அதே நேரத்தில் தோனியின் உடல்நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து பிசிசிஐ எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அடுத்ததாக நடைபெற இருக்கும் ஒரு நாள் போட்டியில் கேப்டன் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.அணியினை துணை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தோனிக்கு பதிலாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்தார். அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் அடுத்தப் போட்டியிலும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.அதே நேரத்தில் காயம் சரியாகும் பட்சத்தில்,தோனி போட்டியில் பங்கேற்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், விராட் கோலிக்கு பதிலாக 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான அணியில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில்க்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.