''பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையா''...இந்து பெண்ணிற்கு கிடைத்த கெளரவம்!
Home > News Shots > தமிழ்By Jeno | Jan 29, 2019 08:08 PM
பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக இந்துப் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுமன் குமாரி போதன்,இவர் தான் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் பெண்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குவம்பர் சஹாதகாத் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இந்து மதத்தை சேர்ந்தவர்.இவர் பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் எல்.எல்.பி படிப்பையும், கராச்சியில் உள்ள ஸாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பையும் படித்தார். தொடர்ந்து தனியார் சட்ட நிறுவனம் ஒன்றில் வழக்கறிஞராக தனது பணியை ஆரம்பித்தார்.
அங்கு பணியில் இருந்துகொண்டே நீதிபதி தேர்வுக்காக தன்னை தயார்படுத்தி வந்தார்.அதன்படி நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்ற சுமன் குமாரி,சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.மேலும் கூடுதல் மகிழ்ச்சியாக அவரது சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு நீதிபதியாக பணி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரது தந்தை பவன் குமார் கூறுகையில் ''இது எனக்கு மிகவும் பெருமையான தருணம்.சிறுபான்மை மதத்திலிருந்து பெண் ஒருவர் இந்தப் பதவிக்கு வருவது இது தான் முதல் முறை.அதை எனது மகள் சாதித்து காட்டியுள்ளார்.நேர்மையுடன், நீதி தவறாமல் எனது மகள் பணியாற்றுவாள் என எதிர்பார்க்கிறேன்.சொந்த மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என ஆசைப்பட்டாள்.அது தற்போது நிறைவேறியுள்ளது என கூறினார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சார்ந்த ராணா பகவான்தாஸ் என்பவர் தலைமை நீதிபதியாக 2005 முதல் 2007 வரை பணியாற்றியுள்ளார். ஆனால் இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது இது தான் முதல் முறை என்பது கூடுதல் சிறப்பு