மனித நேயத்தால் உயர்ந்த கேரள முஸ்லீம் இளைஞர்கள் !
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 22, 2018 03:33 PM
கடும் மழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவை சேர்ந்து கேரளாவை நிலைகுலைய வைத்துவிட்டது.கொட்டிய பெருமழையின் பாதிப்பிலிருந்து மீள போராடுகின்றனர் கேரளா மக்கள். பல இடங்களில் வீடுகளில் சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாத நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.
இளைஞர்கள், பொதுமக்கள், ராணுவம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இப்போது வரை ஈடுபட்டிருக்கிறார்கள். கேரளாவை மீட்டு கொண்டுவருவதில் பலரும் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோவிலை சுத்தம் செய்து பலரையும் நெகிழ்வடைய செய்துள்ளார்கள் முஸ்லீம் இளைஞர்கள்.இவர்கள் வயநாடு அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகள் சிலர் அருகாமையில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணு கோவிலையும் சுத்தம் செய்ய முடியுமா என தயக்கத்துடனே கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் "நாங்கள் முஸ்லீம்கள் தான். ஆனால் கோவில் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தால் உடனடியாக கோவிலை சுத்தம் செய்ய தயாராக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்கள்.இதனை அறிந்த கோவில் நிர்வாகமும் கோவிலை சுத்தப்படுத்த அனுமதி அளித்தனர். கோவிலின் கருவறையை தவிர அனைத்து பகுதியையும் முஸ்லீம் இளைஞர்கள் சுத்தம் செய்து கொடுத்தனர்.
சாதி மத வேறுபாடுகள் அனைத்தையும் உடைத்து மனிதம் மட்டுமே உன்னதமானது என்பதை நிருபித்து விட்டார்கள் இந்த இளைஞர்கள்.