அலைபாயுதே
அலைபாயுதே

90-களின் ஆரம்பத்திலேயே பிறந்திருந்தாலும், அலைபாயுதே வந்த போது வயது பத்து தான் இருந்திருக்கும். அப்படி இருந்தும் 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் காதல் படமாக அலைபாயுதேவை ஆக்கிய பெருமை சிடிக்கும் டிவிக்கும் சேரும். அப்படி சலிக்க சலிக்க சக்தியையும் கார்த்திக்கையும் பார்த்தது அந்த தலைமுறை. நண்பர்கள் சூழ, மாங்கல்யம் தந்துனானே வெஸ்டர்னில் ஒலிக்க, ஒட்டுமொத்த ரிஜிஸ்டர் மேரேஜுக்கும் பிள்ளையார் சுழி போட்டது அந்த கோவில் சீன். துள்ளல் குறையாமல் சுற்றும் மாதவன், மிடில்க்ளாஸ் குடும்பத்துக்கே உரிதான அடக்கமும் குறும்பும் சேர்ந்த ஷாலினி என இரண்டு பேரை வைத்து மணிரத்னம் செய்த மேஜிக், 20 வருடத்திற்கும் அலைபாயுதேவை ட்ரென்ட் செட்டராக வைத்திருக்கிறது. சக்தி நீ அழகா இருக்கன்னு நினைக்கல, ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு என கார்த்திக் சொல்லும் வசனம், காலத்தால் மட்டுமல்ல எந்த கார்பன் பேப்பர் வைத்து தேய்த்தாலும் அழியாது. சிமன்ட் பூசாத செங்கல் வீடு, ஆணியில் தொங்கும் தாலி, அடிக்கடி வரும் சண்டைகள், உருக வைக்கும் க்ளைமாக்ஸ் என அலைபாயுதேவில் நிரம்பி வழிந்தது மணிரத்னம் டச். ரயிலில் பார்க்கும் பெண், மளிகை கடை பி.சி.ஓ, திருட்டு கல்யாணம், சிறியதாக ஒரு காதல் பிரிவு என ஏதாவது ஒன்று 90-களில் பிறந்தவர்களுக்கு நடக்காமல் இருந்திருக்காது. அப்படியான மெமரீஸ்களை தாங்கி நின்றது அலைபாயுதே. இது ஒருபுறம் இருக்க, மாதவன் மாட்டிய ஹெட்ஃபோனாய் நமக்குள் ரீங்காரம் இட்டது பாடல்கள்.  ஜானருக்கு ஒரு ஹிட்டாக ஏ.ஆர்.ரகுமான் பாடல்களும் அதை கண்ணுக்குள் இறக்கிய பி.சி.ஶ்ரீராமின் விஷுவல் ப்யூட்டியும் அலைபாயுதேவை அலைபாயாமல் நமக்குள் கடத்தி சென்றது. இதையெல்லாம் தாண்டி, கட்டுனா இப்படிதான் கல்யாணம் கட்டனும் என அலைபாயுதேவை பார்த்த சபதமேற்றவர்கள் ஏராளம். அப்படி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தவர்களிடம் கேட்டு பாருங்கள், அவர்கள் சொல்லுவார்கள் அலைபாயுதேன்னா என்னவென்று. அப்படியான 90-ஸ் கிட்ஸ்களுக்கே மட்டுமே தெரியும் அலைபாயுதேவின் அருமை!