PONMAGAL VANDHAL (TAMIL)
MOVIE WIKIPONMAGAL VANDHAL (TAMIL) RELATED CAST PHOTOS
PONMAGAL VANDHAL (TAMIL) MOVIE REVIEW
Review By : Behindwoods Review Board, Karthikeyan S Release Date : May 29,2020Movie Run Time : 2 hours 3 minutes Censor Rating : U
ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'பொன்மகள் வந்தாள்'. சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள இந்த படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்கியுள்ளார்.
15 வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகளை கடத்தி கொலை செய்த, ஒரு சைக்கோ கொலைகாரியின் வழக்கை கையில் எடுக்கிறார் வழக்கறிஞரான வெண்பா பெத்துராஜ். அவருக்கு எதிராக களமிறங்குவது மிகவும் பலம் வாய்ந்த வழக்கறிஞர் ராஜரத்தினம். ஊரே எதிர்க்கும் ஒரு சைக்கோ கொலைகாரிக்கு ஆதரவாக, அதுவும் 15 வருடங்களுக்கு பிறகு வெண்பா ஏன் களமிறங்குகிறார் ? ராஜரத்தினத்தை தனது வாதத் திறமையால் வீழ்த்தி, வழக்கில் வென்றாரா ? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த பொன்மகள் வந்தாள்.
தொடர்ச்சியாக பாலியல்ரீதியாக பெண் குழந்தைகள் துன்புறுத்தலுக்குள்ளாகும் சமூகத்தின் மிக முக்கிய பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஃபெட்ரிக்.
வெண்பா வழக்கறிஞராக ஜோதிகா. கம்பீரமான தோற்றத்தில் அந்த வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார். அவருக்கு எதிராக, வழக்கமான தனது கம்பீரமான குரல், நக்கலான உடல்மொழி, ராஜரத்தினம் என்ற வக்கீலாக பார்த்திபன் சரியான தேர்வு. வெண்பாவின் அப்பாவாக பெட்டிஷ்ன் பெத்துராஜ் என்ற வேடத்தில் பாக்யராஜ், எமோஷனலான காட்சிகளில் தனது தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
வரதராஜன் என்ற ஊர் பெரிய மனிதராக தியாகராஜன், ஜட்ஜாக பிரதாப் போத்தன், வழக்கறிஞராக பாண்டியராஜன், வினோதினி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேடங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
15 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சைக்கோ கொலைகாரியின் வழக்கிற்கும், வெண்பாவிற்கும் என்ன சம்மந்தம் என்ற கதையில் இருக்கும் மர்மம் முதல் பாதியை சுவாரஸியப்படுத்துகிறது. இருப்பினும் இரண்டாம் பாதிக்கு மேல் திரைக்கதையை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம். காரணம், பெரும்பாலான காட்சிகள் முன்பே யூகிக்க முடிகிறது.
திரைக்கதையில் இயக்குநர் வைத்திருக்கும் சஸ்பென்ஸை பார்வையாளர்களுக்கு தனது இசையின் மூலம் கடத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. பெரும்பாலும் நீதிமன்ற காட்சிகள் நிறைந்துள்ள படத்தில் தனது வித்தியாசமான கோணங்கள் மூலம் கவர்கிறார் ராம்ஜி.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் வேளையில் கிளைமேக்ஸில் ஜோதிகா பேசும் ஒவ்வொரு வசனமும் நிச்சயம் பெற்றோர்களை கண்கலங்க வைக்கும். மேலும் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது மட்டும் போதாது. ஆண் குழந்தைகளையும் பெண்களை மதிக்கக் கற்றுத்தர வேண்டும் என்ற உயரிய கருத்தை பேசியிருக்கிறாள் இந்த பொன்மகள் வந்தாள்.