நடிகர் சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் நடித்துள்ளார். சிம்பு கடைசியாக நடித்த செக்க சிவந்த வானம் வெற்றி பெற்றதால் இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படம் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்ட சிம்பு, பேனர், கட் அவுட் வைக்காதீர்கள் . அதற்கு பதில் உங்கள் அப்பா மற்றும் அம்மாவுக்கு வேட்டி சேலை எடுத்துக் கொடுங்கள் என பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவுக்கு வரவேற்பும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் நேற்று மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகர் சிம்பு, தனது ரசிகர்களிடம், தனது படம் வெளியாகும் போது அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு விநியோகிஸ்தர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுச்சாமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிம்பு மீது புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து Behindwoods தளத்துக்கு அளித்த பேட்டியில், நாங்கள் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடை செய்ய வேண்டுகிறோம். காரணம் அந்த நேரத்தில் குழந்தைகள் பால் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என்பதால் தான்.
கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடை செய்யக் கோரி கடந்த 2015 ஆண்டு முதல் வேண்டுகிறோம். இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமையும். ஏற்கனவே விஸ்வாசம் மற்றும் பேட்ட திரைப்படங்கள் ஒன்றாக வெளியான போது, வன்முறைகள் ஏற்பட்டன.
தமிழில் ஒரு முன்னணி நடிகர் ஒருவரின் படம் வெளியான போது இப்படி பால் திருடப்பட்ட சம்பவம் நடைபெற்றது. ஆனால் தற்போது சிம்பு அண்டா அண்டாவாக பாலூற்றுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளதால் அதனை கட்டுப்படுத்தவது கடினம். எனவே கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும். மேலும் சிம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.