இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள ‘பேரன்பு’ திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கியமான திரைப்படம் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பேரன்பு’ திரைப்பட்ம வரும் பிப்.1ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் மனதை இப்படம் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் ராம் குறித்தும், அவரது பேரன்பு குறித்தும் பேசியுள்ளார். தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவிற்கு ‘பேரன்பு’ முக்கியமான திரைப்படம். மனித மனங்களுக்குள் இருக்கின்ற பேரன்பை பற்றி பேசும் படம்.
குறிப்பாக மாற்றுத் திறனாளி குழந்தை வளர்ப்பும், அவர்கள் மனதில் இருப்பதை அவர்களது பார்வை வழியே இந்த உலகத்தை பார்க்கும் படமாக பேரன்பு திரைப்படம் உருவாகியுள்ளது. கிளாஸிக் தன்மையுடன் உருவாகியுள்ள இப்படம் அனைத்து வகையான மக்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
பேரன்பை இயக்கிய ராம் அவர்கள் தமிழ் சினிமாவில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவரது திரைப்பட மொழி, திரைப்படத்தை உருவாக்கிய தன்மை, மனிதர்கள் மீதுள்ள அக்கறை போன்றவற்றிற்காகவே இப்படம் நேர்மையான வெற்றியை பெறும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். மகிழ்ச்சி என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.