‘தரமணி’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேரன்பு’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
மலையாள நடிகர் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்கமீன்கள்’ சாதனா உள்ளிட்டோர் நடித்துள்ள ’பேரன்பு’ திரைப்படம் வரும் பிப்.1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை குவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ Behindwoods Tv-யில் வெளியிடப்பட்டுள்ளது. அமுதன், பாப்பா-வின் உலகம் உருவான விதம் குறித்து இயக்குநர் ராம் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
மனிதர்கள் இல்லாத, குருவிகள் சாகாத ஒரு இடம் தேவைப்படும் ஒரு மனிதன், சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர், மக்களை நேசிக்கும் மனிதராக எப்படி மாறுகிறார் என்பதை சொல்வது தான் பேரன்பின் கதை என இயக்குநர் ராம் தெரிவித்தார்.
இந்த கதைக்கு ஏற்ப கேமராமேன், இயக்குநரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பேரன்பு படத்தின் செட் வடிவமைக்கப்பட்டது. ஸ்பாஸ்டிக் பாதித்த சிறுமியாக நடித்துள்ள சாதனா, உடலை இறுக்கமாக வைத்துக் கொண்டு வலிகளை தாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடியும் வரை மரியா என்பவர் சாதனாவுக்கு ஸ்பாஸ்டிக் தெராப்பி சொல்லிக் கொடுத்து அவருக்கு உதவியாக இருந்தார்.
மம்மூட்டி சார் அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும், சாதனாவுக்கு வசதியாக எளிமையாக பழகினார். அப்பாவுடன் நடிப்பது போன்ற உணர்வை சாதனாவுக்கு கொடுத்தார். இப்படத்தின் லொகேஷன் மனிதர்கள் அதிகம் வசிக்காத தனிமையான இடம் என்பதால், சற்று தொலைவாக இருந்தது. மம்மூட்டி சார் 3 மணி நேரம், அஞ்சலி மற்ற படக்குழுவினர் எல்லோரும் ஒரு மணி நேரம் பயணம் செய்து வருவார்கள். அந்த பேரன்பின் செட் எனக்கு பிடித்துவிட்டதால் எனது குழுவுடன் நான் அங்கேயே தங்கிவிட்டேன் என இயக்குநர் ராம் கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளி மகளுக்கும், அந்தக் குழந்தையின் தந்தைக்குமான பாசப் பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
பேரன்பின் உருவாக்கம்: அமுதன், பாப்பா-வின் உலகம் உருவானது இப்படி தான் VIDEO