தமிழில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு சாக்லேட் பாயாக வளம் வந்த மலையாள நடிகர் பிரித்விராஜ் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் பிரிதிவிராஜின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாகவும் வித்தியாசமாகவும் காவியத்தலைவன் திரைப்படத்தில் அமைந்தது. வசந்தபாலன் இயக்கிய இந்த திரைப்படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்திருந்தார்.
இதில் நாடக குழுவில் இருக்கும் சித்தார்த்துக்கு குருவின் பாராட்டுகள், மக்களின் அபிமானம், இளவரசியின் அபிப்ராயம் உட்பட எல்லா புகழும் கிடைக்க, அதே நாடக குழுவில் இருக்கும் தமக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததால் வழி தவறிப் போகும் மனநிலையை பிரித்விராஜ் அடைகிறார். ஒரு கட்டத்தில் சமூக விடுதலையை முதன்மையான நோக்கமாகக் கொண்ட சித்தார்த் ஒருபக்கம் இயங்க, சித்தார்த் முன்னிலையில், தானொரு முதன்மையான ராஜபார்ட் ஆக வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு முற்றிலும் எதிர்மறை சிந்தனையில் வாழ்க்கையை அணுகும் பிரித்விராஜின் கதாபாத்திரம் இறுதியில் நம்மை அழ வைத்துவிடும். வாழ்க்கையின் பல்வேறு உளவியல் மனநிலைகளை பிரதிபலிக்கும் பிரித்விராஜின் இந்த கதாபாத்திரம் பன்முகத் தன்மை கொண்ட வில்லனை திரையில் நிறுத்தியது. இந்த படத்தில் நடித்ததற்காக பிரித்விராஜ்க்கு 2013 ஆம் ஆண்டு சிறந்த வில்லன் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.