பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது ஒருவரின் இருப்பை இந்த சமூக வலைதளங்களை கொண்டே அறிய முடிகிறது.
அதே போல தான் செய்திகள். முந்தைய தலைமுறையினர் ஒரு செய்தியை அறிந்து கொள்ள அன்றைய தினம் செய்தித்தாள்கள், எப்பொழுதாவது ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அல்லது வானொலி செய்திகள் மட்டுமே அவர்களின் ஆதாரம்.
ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியினால் நமக்கு உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது. நம் 24 மணி நேரமும் ஏதாவதொரு பிரேக்கிங் நியூஸ்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம்.
குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியினால் நாம் ஒவ்வொருவரும் செய்தியாளர்கள் ஆகிவிட்டோம். நம்மால் எந்தவொரு செய்தியையும் உலகின் எந்த மூலைக்கும் கொண்டு சென்று சேர்க்க முடியும். அதில் எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ, சரிபாதி தீமையும் இருக்கிறது.
காரணம் ஒருவர் சமூகவலைதளங்களில் சொல்லும் செய்தியை துளி கூட ஆராயாமல் நம்மில் பெரும்பாலானோர் உண்மை என நம்பி விடுகிறோம். நம்புவது மட்டுமில்லாமல் அதனை உடனடியாக நம் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறோம். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் அது தவறான செய்தியாக இருந்தால், சம்பந்தப்பட்டோரை எந்த அளவுக்கு பாதிக்கும் என நாம் சற்றும் சிந்தித்து பார்ப்பதில்லை. அப்படி நாம் தவறாக உருவாக்கும் அல்லது தவறாக சித்தரிக்கும் செய்தி ஒருவரின் வாழ்வில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மிகச் சரியாக விளக்கியிருக்கிறது யுவர்ஸ் ஷேம்ஃபுலி 2 (Your Shamefully 2) என்ற குறும்படம்.
எப்பொழுது நேர்மறையான செய்திகளை விட, எதிர்மறையான செய்திகளே மக்களிடையே அதிகம் கவரக்கூடியதாக இருக்கிறது. உதாரணம் ஒருவரை பற்றி நல்ல விதமாக சொல்லுவதை விட, தவறாக சொன்னால் அது இன்னும் அதிக மக்களை சென்றடைகிறது.
அப்படி சமூகவலைதளங்களினால் தவறாக சித்தரிக்கப்படும் ஒருவர் என்ன மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்கிறார் என்பதை மக்களுக்கு உரைக்கும் வண்ணம் இந்த குறும்படம் உருவாகியிருக்கிறது.
இந்த குறும்படத்தின் பலமே கதை சொல்லப்பட்டிருக்கும் விதம்தான். ஒரு பெண்ணால் ஒருவர் தவறாக சித்தரிக்கப்படுகிறார். அது உண்மையா இல்லையா என்று அறியாமலேயே சமூகம் அவரை குற்றவாளியாக்குகிறது. அதனால் அந்த நபர் கடுமையாக பாதிக்கப்படுகிறார். அவரால் அவ்வளவு எளிதாக சமூகத்தை எதிர்கொள்ள முடியவில்லை.
.
பின்னர் எப்படி அந்த பெண் தன்னை குற்றவாளியாக்கினாரோ, அதே டெக்னிக்கை பயன்படுத்தி தான் எப்படி குற்றமற்றவர் என்பதை எப்படி நிரூபிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை.
ஒளிப்பதிவு, இசை, விஎஃப்க்ஸ் என தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் பிரதான கதாப்பாத்திரங்களாக விக்னேஷ் கார்த்திக், சௌந்தர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை கதை எழுதி விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இந்த படம் Behindwoods TV யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இறுதிக்காட்சியை பார்த்த பிறகு நிச்சயம் சமூகவலைதளங்களில் ஒரு செய்தியை பகிரும் முன் நம் கைகள் சற்று யோசிக்கும் . அதுதான் இந்த படத்தின் வெற்றியும் கூட
'இந்த குறும்படத்தை பார்த்தால், சமூகவலைதளங்களில் ஒரு செய்தியை பகிர உங்கள் கைகள் யோசிக்கும்' VIDEO