தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கிறார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வரும் பிப்.2 & 3 தேதிகளில் நடைபெறவுள்ள 'இளையராஜா 75' விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இளையராஜாவை கொண்டாடும் இந்த பாராட்டு விழாவிற்கான டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் பங்கேற்கின்றனர். இவர்களை தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இவ்விழாவை தொடங்கி வைக்குமாறு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொது செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தனர்.
அவர்களது அழைப்பினை ஏற்று, வரும் பிப்ரவரி 2ம் தேதி ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். மேலும், 'இளையராஜா 75' என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து பிப்.2ம் தேதி முன்னணி நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மறுநாள் பிப்.3ம் தேதி ‘பத்ம விபூஷன்’ இசைஞானி இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.