தமிழ் சினிமாவில் நிதி பிரச்னை காரணமாக தேங்கிக் கிடக்கும் திரைப்படங்களை வெளியிட உதவும் முயற்சியாக தமிழ் திரைப்பட ஃபைனான்சியர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா ஃபைனான்சியர்களுக்காக ‘தென்னிந்திய திரைப்பட ஃபைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association - SIFFA)’ என்ற அங்கீகரிக்கப்பட்ட சங்கம் உதயமாகியுள்ளது.
தென்னிந்திய திரைப்பட ஃபைனான்சியர்கள் சங்கம் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, திரைப்படத்துறை நன்கு வளர பாடுபடுவதே இச்சங்கத்தின் நோக்கம் என இதன் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார். இச்சங்கத்தில் துணை தலைவர் - சந்திரப்பிரகாஷ் ஜெயின், பொருளாளர் - அன்பு செழியன், செயலாளர் - அருண் பாண்டியன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது 20 ஃபைனான்சியர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இச்சங்கத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஷூட்டிங் முடிந்து, நீண்ட நாட்களாக ரிலீசாகமல் கிடப்பில் இருக்கும் திரைப்படங்களை வெளியிடுவதற்கும், நிதி பிரச்சினைகள் காரணமாக தடைசெய்யப்பட்ட படங்களை மீண்டும் தொடங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அது மட்டுமின்றி இனி நடிகர்கள் அவர்கள் முதலில் ஒப்புக் கொண்ட திரைப்படத்தை முடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும், ஒரு தயாரிப்பாளர்கள் முதலாவது ஃபைனான்சியர் ஒப்புதல் இல்லாமல் இன்னொரு ஃபைனான்சியரிடம் கடன் வாங்க முடியாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனி ஒரு படம் ரிலிஸ் ஆக இந்த புது சங்கத்திலும் NOC வாங்க வேண்டும். திரைப்படத் துறையில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், ஃபைனான்சியர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கு திரைத்துறையில் முக்கிய பங்கு உள்ளது. இந்த சங்கங்களுடன் நட்புடன் பழகி திரைப்படத்துறை வளர பாடுபடுவோம் என தென்னிந்திய திரைப்பட ஃபைனான்சியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.