இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் பெற்றுத் தந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை சிறப்பிக்கும் விதமாக மும்பையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில், ஏ.ஆர்.ரஹ்மானுடன் அவரது மூத்த மகள் கதிஜா ரஹ்மான் உரையாடினார். அப்போது பேசிய கதிஜா, ரெண்டு ஆஸ்கர் வாங்கிட்டு வந்து பத்து வருஷமாச்சு. இன்னும் அப்பா அதே ரஹ்மானாகத்தான் இருக்காரு. அணு அளவும் அவர் மாறல. அப்போ எப்படி இருந்தாரோ அதே மாதிரிதான் இருக்கீங்க என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பினரும் ரஹ்மான் குறித்தும் அவர் மகள் குறித்தும் பெருமிதம் தெரிவித்தனர்.
ஒரு சிலர் அவரது மதத்தை பிரதிபலிக்கும் விதமாக முகத்திரை அணிந்திருப்பதை பார்த்து ரஹ்மானை குறை கூறினர். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா தனது பேஸ்புக் பக்கத்தில், நானும் அப்பாவும் மேடையில் பேசிக்கொண்டது இவ்வளவு பரவலாக பேசப்படுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை.
நான் அணிந்திருந்த முகத்திரை என் தந்தையின் வற்புறுத்தலாலே நடந்தது என்றும், அவர் உள் ஒன்று புறம் ஒன்று என இரட்டை நிலை கொண்டவர் என்ற பேச்சுக்களை ஆங்காங்கே காண முடிந்தது. நான் உடுத்தும் உடையோ தோற்றமோ நான் என் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் முடிவுகளுக்கோ என் பெற்றோர்களுக்கு துளியும் சம்பந்தம் கிடையாது.
நான் முழுமையாக சுய விருப்பத்துடன் இந்த முகத்திரையை அணிந்திருக்கிறேன். எனக்கு எது வேண்டும் என தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன். எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்கள் எது அணிய வேண்டுமென்ற சுதந்திரம் இருக்கிறது. அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். உண்மை நிலவரம் தெரியாமல் யாரையும் மதிப்பிடாதீர்கள். என குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், நீட்டா அம்பானியுடன் தனது மனைவி மற்றும் இரு மகள்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து freedom to choose என்று குறிப்பிட்டிருந்தார்.