பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு திரைப்படங்களை தொடர்ந்து தற்போது டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் களமிறங்கியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு டிடெக்டிவ் வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபுவும் அவரது மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கரும் இணைந்து இம்முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.
டிடெக்டிவ் த்ரில்லர் ஜான்ரில் உருவாகவிருக்கும் வெப் சீரிஸுக்கு ‘சார்லி’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் சுமார் 24 எபிசோடாக உருவாக்கப்படவுள்ளது. குற்றங்கள் குறித்து துப்பறியும் கதாநாயகனின் பெயர் தான் சார்லி என கூறப்படுகிறது.
இதற்காக க்ரைம் உலகம் பற்றிய பல விஷயங்களை ஆராயும் பணிகளில் மகேஷ்பாபுவின் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த க்ரைம் வெப் சீரிஸுக்காக நக்சலைட் மற்றும் தீவிரவாதிகளை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வெப் சீரிஸ் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி, விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படவுள்ளது. ஜியோ நிறுவனத்துடன் இணைந்து மகேஷ்பாபு தயாரிக்கும் இந்த வெப் சீரிஸை ஹிந்தியில் டப் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி திரைப்படங்கள் தயாரிப்பதிலும் மகேஷ்பாபு ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘மகரிஷி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 5ம் தேதி ரிலீசாகவுள்ளது.