சுசீந்திரன் இயக்கி வரும் ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தில் நடித்து வரும் கபடி வீராங்கனைகள், நிஜமாக நடத்தப்பட்ட கபடிப் போட்டியில் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையைத் தட்டிச் சென்றனர்.
பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, சசிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடந்து முடிந்தது. தற்போது இறுதிக்கட்டமாக விழுப்புரத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில், தமிழகத்திலேயே சிறந்த கபடி குழுவான ‘வெண்ணிலா கபடி குழு’-வில் இருந்து 7 கபடி வீராங்கனைகள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கபடி வீராங்கனைகள் பெரிதாக கருதுவது தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை தான். இந்த கோப்பையின் மதிப்பு ரூ.12 லட்சமாகும். ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக நடைபெற்று, இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு 'தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை' வழங்கப்படும்.
இந்த ஆண்டு திருச்செங்கோட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்ற ‘கென்னடி கிளப்’ வீராங்கனைகள் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை வென்றதுடன், ரூ.12 லட்சத்தையும் தட்டிச் சென்றனர். கபடி வீராங்கனைகளின் இந்த வெற்றியை ‘கென்னடி கிளப்’ படக்குழு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.