சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் அரசு பேருந்தில் திருட்டுத்தனமாக திரையிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜன.10ம் தேதி வெளியானது. தொடர்ந்து 2 வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘பேட்ட’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிக்குமார் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் பழைய ரஜினியின் துள்ளலான நடிப்பை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், கரூர்-சென்னை மார்க்கமாக சென்ற தமிழக அரசுப் பேருந்தில் திருட்டுத்தனமாக திரையிடப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரஜினி ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட் வைரலானதையடுத்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சன் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் சங்கம், விஷால் உள்ளிட்டோருக்கு ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகரும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், பைரசி தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். அரசு பேருந்துகளில் திருட்டுத்தனமாக காண்பிக்கப்படுவதற்கான ஆதாரம் இதோ உள்ளது என ட்வீட்டியுள்ளார்.
Truly hope the Govt takes some action on Piracy. Here is confirmed source with evidence that Pirated Movies are played in Govt Buses.@CMOTamilNadu @OfficeOfOPS @OfficeofminMRV @Kadamburrajuofl https://t.co/0orfstYjPP
— Vishal (@VishalKOfficial) January 19, 2019