கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் ரசிகர்கள் தங்களது சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளனர்.
நெற்களஞ்சியமான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த வரலாறு காணாத கஜா புயலில் சிக்கி சிறு, குறு விவசாயிகள், தென்னை விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக தமிழ் திரையுலகில் இருந்து முதல் ஆளாக சூர்யா குடும்பத்தினர் ரூ.50 லட்சம் வழங்கினர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைக்க சூர்யா, கார்த்தி ரசிகர் மன்றத்தினர் களத்தில் இறங்கி பல்வேறு உதவிகளை செய்தனர்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை அருகே தண்டா குளத்துக்கரை என்ற குக்கிராமத்தில் வசித்து வந்த 50 குடும்பங்கள் கஜா புயலில் சிக்கி தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து, அப்பகுதியை பார்வையிட்ட சூர்யா-கார்த்தி நற்பணி இயக்கத்தினரிடம், தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடுகள் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்களது ஒரே கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக வீடுகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் 15 வீடுகள் கட்டித்தர நற்பணி இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். தற்போது 2 வீடுகள் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கு தேவையான முழு செலவையும் சூர்யா-கார்த்தி ரசிகர்களே ஏற்கபதாக தெரிவித்துள்ளனர்.
சூர்யா-கார்த்தி ரசிகர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இத்திட்டத்தினால் பயனடையவுள்ள தண்டா குளத்துக்கரை மக்கள், சூர்யா-கார்த்தி நற்பணி இயக்கத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.