புற்றுநோய் தனக்கு வாழ்வின் மதிப்பை கற்றுத்தந்ததாக திரைப்பட நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
தமிழில் மணிரத்னத்தின் ‘உயிரே’, ‘பாம்பே’, ஷங்கரின் ‘இந்தியன்’, ‘பாபா’, ‘முதல்வன்’, ‘ஒரு மெல்லிய கோடு’, தனுஷின் ‘மாப்பிள்ளை’ திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா, அமெரிக்கா சென்று தீவிர சிகிச்சை பெற்று, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார்.
இந்நிலையில், ‘ஹீல்டு: புது வாழ்வு கொடுத்த கேன்சர்’ எனும் தலைப்பில் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ள மனிஷா கொய்ராலா, தன்னை பாதித்த புற்றுநோய் குறித்தும், அதில் இருந்து மீண்டு வந்த அனுபவம் குறித்தும் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
இதனிடையே ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய மனிஷா, தன்னை பாதித்த புற்றுநோய் தனக்கு ஆசான் என்றும், அது வாழ்வின் மதிப்பை கற்றுக் கொடுத்ததாகவும் மனிஷா தெரிவித்துள்ளார்.
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பிறகு தான் தனது குடும்பத்தை அதிகம் நேசிக்க ஆரம்பித்தேன். உடல்நலத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறேன் என்றார். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஆரம்பக்கட்டத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் கூடிய விரைவில் குணப்படுத்திவிடலாம். புற்றுநோய் குறித்த அறிகுறிகள் எனது உடலில் தெரிந்தும், அதை நான் கவனிக்காததால் அதிகம் சிரமப்பட்டேன் என மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
What an incredible experience to participate @ZEEJLF thank you @SanjoyRoyTWA for such special session 🙏🏻 #book #healed #MANISHAKOIRALA pic.twitter.com/xmwY5eZ1XL
— Manisha Koirala (@mkoirala) January 27, 2019