அஜித் நடிப்பில் தற்போது பொங்கலை முன்னிட்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தந்தை மகளுக்கிடையேயான அன்பை பற்றிய பேசிய இந்த படம் குடும்ப ரசிகர்களை திரையரங்கம் நோக்கி அழைத்து வந்துள்ளது.
இந்நிலையில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அஜித் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது,
அதில், நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளவன் என்பதை அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை தெளிவாக புரிந்து வைத்திருப்பதே இதற்கு காரணம்.
சில வருடங்களுக்கு முன்பு என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும்இதன் பின்னணியில் தான்.
என் மீதோ என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர் இயக்கங்கள் மீதோ என் ரசிகர் இயக்கங்களின் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்று நான் சிந்தித்ததன் சீரிய முடிவு அது.
இதன் பின்னும் கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் நேரத்தில் இத்தகைய செய்திகள் வருவது எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற ஐயப்பாட்டை பொதுமக்களிடையே விதைக்கும்.
இந்த தருணத்தில் நான் தெரிவிக்க விழைவது என்னவென்றால் எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் ஆர்வம் இல்லை.
என் ரசிகர்களிடம் வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்கள் கடமையை செவ்வனே செய்வதும் சட்ட ஓழுங்கை மதித்து நடந்துகொள்வதும் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பதும் மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும் ஆகியவை தான் . அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு . வாழு வாழ விடு. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது,