தமிழ் திரையுலகிற்கு சாபமாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒரே நாளில் ஒழித்துக்கட்ட தமிழக அரசால் தான் முடியும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த பிப்.2,3 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இளையராஜா 75’விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை வெற்றிவிழாவாக மாற்றிய அனைவருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகருமான விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘இளையராஜா 75’ விழாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நடிகர் விஷால் மற்றும் அவரது குழுவினர் நன்றி தெரிவித்தனர். மேலும், விழாவின் போது பாதுகாப்பு, போக்குவரத்து விஷயங்களை கவனித்துக் கொண்ட தமிழக காவல்துறைக்கும் விஷால் நன்றி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், இளையராஜா விழாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்தார். தமிழக அரசை தான் கடவுளாக நம்பியிருக்கிறோம். அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை ஒழித்துக்கட்ட முடியும் என விஷால் கூறினார்.