ஆண்களை வலையில் வீழ்த்தி பணம் பறித்த பெண்கள் உட்பட 11 பேர் .. சிக்கிய அடுத்த வீடியோ கும்பல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 21, 2019 11:36 AM
பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் பேசி, அவர்களின் நம்பிக்கையை சம்பாதித்து, நட்பாகி தங்கள் இருப்பிடத்துக்கே வரவழைத்து, அவர்களை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் வீடியோ எடுத்த பொள்ளாச்சி கொடூர கும்பலால் தமிழ்நாடே கதிகலங்கியது.
பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் மாணவிகள் என்பதால், அவர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் மட்டுமல்லாது மற்ற பெற்றோர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நிலையில்தான் மற்றுமொரு பரபரப்பான வீடியோ சம்பவம் வேலூர் அருகே உள்ள வாணியம்பாடியில் நிகழ்ந்துள்ளது அதிரவைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர் அப்துல் ரிப் ஆரிப் என்பவர் வேலூரில் உள்ள தனது தாயாரைக் கவனித்துக்கொள்ள உதவியாள் வேண்டும் என விளம்பரம் கொடுத்துள்ளார்.
ஒருநாள் அவருக்கு ஆபிதா என்கிற பெண்ணிடம் இருந்து போன் வந்துள்ளது. ஆரிப்பின் தாயாரை பார்த்துக்கொள்வதாகவும், அந்த பணியை தான் செய்வதாகவும் கூறிய ஆபிதா, தன்னை முதலில் நேரில் சந்தித்து பேச அழைத்திருக்கிறார். அதை நம்பி வாணியம்பாடி சென்ற அப்துல் ரிப் ஆரிப், ஒரு ஆட்டோவில் ஏற்றப்பட்டு ஓரிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 10 பேர் கொண்ட கும்பலின் நடுவே தள்ளப்பட்ட ஆரிப், அரைகுறையாய் இருந்த பெண்களுடன் தகாத முறையில் புகைப்படம் எடுக்கப்பட்டு மிரட்டப்பட்டதோடு, 3 லட்சம் பணத்தையும் பறிகொடுத்தார்.
பின்னர் ஆரிப் வாணியம்பாடி போலீசாரிடம் புகார் அளித்த பின், அவர்கள் நடத்திய விசாரணையில், ஆபிதா, தாரா என்கிற 2 பெண்கள், ஷாபுதின், நதீம், கோவிந்தராஜ், மனோஜ், அசேன், சதாம் உசேன், இப்ராஹிம், அஸ்லம், சாது என 9 ஆண்கள் கொண்ட 11 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.
ஆண்கள், பெண்கள் என முக்கிய தொழிலதிபர்களின் அன்றாட தேவைகளை அறிந்து அதன் மூலம் அவர்களைக் குறிவைத்து தங்கள் வலையில் விழவைத்து பணம் பறிக்கும் இந்த கும்பல் பலரையும் தகாத முறையில் புகைப்படம், வீடியோக்கள் எடுத்து மிரட்டியதால், இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எனினும் இவர்களை விசாரணைக் காவலில் எடுக்கக் கோரி காவல் துறையினர் கேட்டுள்ளனர். அப்போதுதான் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என தெரியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.