ஒரே மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 13, 2018 02:18 PM
கல்வி வாய்ப்பு என்பதே பெரும் சிரமமாக இருக்கும் காலக்கட்டத்தில் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவிகளின் தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கி வருவதோடு பெற்றோர்களிடத்தில் பெருத்த அச்சத்தை விளைவித்துள்ளது.
திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பு சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததனால், சில நாட்களுக்கு முன் மாணவி ஷில்பா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனையடுத்து அந்த கல்லூரி முதல்வரை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டது.
ஆனால் தற்கொலை செய்துகொண்ட ஷில்பாவின் நினைவு கூட இன்னும் முழுமையாக அகலாத நிலையில், அந்த அதிர்ச்சியில் இருந்து அக்கல்லூரி மாணவிகள் மீண்டு வருவதற்குள், அதே கல்லூரியைச் சேர்ந்த இன்னொரு மாணவி அடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மாணவிகளையும் மருத்துவக் கல்லூரியையும் மேலும் தூக்கிவாரிப் போட்டிருக்கிறது.
மேற்கூறிய மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவி கீதிகா. மருத்துவப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இவர், சுதிர் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதை அறிந்த கீதிகாவின் பெற்றோர், கீதிகாவிடம் சண்டையிட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றதால், கீதிகா மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பதிலளித்த பெற்றோர், சுதிர் ரெட்டி ஏற்கனவே திருமணமானவர் என்பதால்தான் கீதிகாவை அழைத்து வந்ததாகவும், அது புரியாமல் தற்கொலைக்கு முயற்சித்த கீதிகாவை ஒரு முறை காப்பாற்றியதாகவும், ஆனால் மீண்டும் தூக்கிலிட்டுக் கொண்டு தற்கொலை செய்துவிட்டார் என்றும் கூறியுள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகளில் அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை, கட்டுப்படுத்தும் வகையில் மாணவர்களின் நலனின் மீது அக்கறைகொண்டு பெற்றோர்களும் ஆசிரியர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.