'சபரிமலை சன்னிதானத்தில் முதல் முதலாக பெண் போலீசார்':கேரள காவல்துறை நடவடிக்கை!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 05, 2018 10:04 PM
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. எனவே சபரிமலை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டி காட்டி ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்ற மற்றொரு பெண்ணும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர்.ஆனால் இந்து அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து அவர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மூடப்பட்டது. இந்நிலையில் மண்டல பூஜைக்காக மீண்டும் இன்று நடை திறக்கப்பட்டது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலவுங்கல் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் முதன்முதலில் 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் போலீசார் பாதுகாப்புக்காக பணியமர்த்தி பத்தனம்திட்ட டிஎஸ்பி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கேரளா போலீஸ் கூறுகையில், அக்டோபர் மாதம் நடந்த வன்முறைகளுக்குப் பிறகு, பெண் போலீசாருக்கு அதிகாரத்தை வழங்குவதில் இந்து அமைப்புகளுக்கு விருப்பமில்லை எனவும் ஆயினும், பெண் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 50 வயதிற்கு மேலான 15 பெண் போலீசாரை பணியமர்த்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.