சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் காவலர், சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவு
Home > News Shots > தமிழ்By Behindwoods News Bureau | Jul 26, 2018 05:24 PM

சென்னை எழும்பூரில் உள்ள 'நீல்கிரிஸ்' சூப்பர் மார்க்கெட்டில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் காவலர் சீருடையில் சென்று திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் அந்த பெண் காவலரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.
முதலில் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த நந்தினி போனில் பேசுவது போல் நீண்ட நேரமாக நடந்து கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரது நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் திடீரென சாக்லெட்டை எடுத்து தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டதை கவனித்த ஊழியர் ஒருவர் கடை உரிமையாளரான ப்ரனாவ்விடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பில் போட வந்த பெண் காவலரை தனது பைக்குள் இருக்கும் பொருட்களுக்கும் சேர்த்து பில் போடும்படி கூறியுள்ளார். அவர் திருடவில்லையென்று சாதிக்கவே அவரை சோதனை போட்டுள்ளனர். இதில் அவர் சாக்லெட் உள்ளிட்ட பொருட்களை திருடி வைத்திருந்தது தெரிய வந்தும் அவர் தான் திருடவேயில்லை என சாதித்துள்ளார். பின் சிசிடிவியில் பதிவான காட்சிகளை காட்டவே தான் திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ப்ரனாவ் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே சில நபர்களுடன் சூப்பர் மார்க்கெட்டில் உள்நுழைந்த நந்தினியின் கணவர் கணேஷ் கடையில் இருந்து ஊழியர்களை ஆபாசமாக திட்டி மிரட்டியதுடன், கடை உரிமையாளரான ப்ரனாவ்வையும் தாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.
சிசிடிவி ஆதாரங்களுடன் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ப்ரனாவ் புகார் செய்தபின் போலீசார் வழக்கு பதிவுசெய்து கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
