'எ(ன்)னை மாற்றும் காதலே'...எதையும் மாற்றும் காதலே!
Home > News Shots > தமிழ்By Manjula | May 07, 2018 08:33 PM
மும்பையை சேர்ந்த சினேகா சௌத்ரி பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, தனது பேஸ்புக் காதலனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
நெகிழ்ச்சியான இந்த காதல் கதை குறித்து அவர் 'ஹ்யூமன்ஸ் ஆப் பாம்பே' என்ற பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், ''திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தபோது எனக்கு 28 வயது. எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் பேசிப்பார்த்தேன். ஆனால் அவர்களிடம் எனக்கு ஈர்ப்பு எதுவும் ஏற்படவில்லை.
அந்த சமயத்தில் ஹர்ஷ் (ஆஸ்திரேலியா) என்பவரிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. நாம் இதற்கு முன் ஒருவருக்கொருவர் அறிந்திருக்கிறோமா? எனக் கேட்டிருந்தார். அதற்கு நான் பதில் அளித்தேன். அதன்பின் தினமும் இருவரும் பேசிக்கொண்டோம்.
ஒருநாளைக்கு 18 மணி நேரம் கூட பேசிக்கொண்டிருப்போம். ஒருநாள் 'நான் காதலில் இருக்கிறேன்' என அவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். மேலும் என்னைக் காதலிப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் நான் பதில் எதுவும் அளிக்கவில்லை.
ஒருமுறை 3 கூழாங்கற்களின் படத்தை ஹர்ஷ் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். நான் ஏற்கனவே பெங்குவின்கள் எப்படி தேர்ந்தெடுத்த கூழாங்கற்களை தங்களுடைய துணையின் காலுக்கடியில் வைத்து காதலை வெளிப்படுத்தும் என அவரிடம் தெரிவித்து இருந்தேன்.
அதனை மனதில் வைத்து அவர் அனுப்பிய கூழாங்கற்களின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா? என எழுதப்பட்டிருந்தது. நான் சிறிதும் தயக்கமின்றி சம்மதம் தெரிவித்தேன். அதன்பின் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை வந்தார். எப்போது தெரியுமா? எங்களது திருமணத்திற்கு 2 நாட்கள் முன்புதான். அதுவரை நானும் அவரும் ஒருமுறை கூட நேரில் பார்த்துக்கொண்டது கிடையாது.
எங்களது பெற்றோரின் சம்மதம் இன்றிதான் திருமணம் செய்து கொண்டோம். 3 வருடங்கள் ஆகிவிட்டன. மகிழ்ச்சியாக நாட்கள் செல்கிறது அடிக்கடி நிறைய கேள்விகள் கேட்டுக்கொள்கிறோம். அதில் ஒன்று பேஸ்புக்கில் யார் முதலில் நட்பு அழைப்பு விடுத்தது என்பது தான்?,'' இவ்வாறு மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக தனது காதல் கதையை சினேகா பதிவிட்டுள்ளார்.