சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 27, 2018 11:35 AM
water scarcity problem in chennai corporation

நீர் மேலாண்மையை பொறுத்தவரை வருடாவருடம் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் தமிழகத்தின் தன்னிகரற்ற மாநகராட்சி சென்னைதான். நீர் மேலாண்மை, குடிநிர் பராமரிப்பு, கால்வாய் வடிகால்கள், அணைத் தேக்க பராமரிப்புகள் உள்ளிட்டவற்றை, ஆட்சிகள் மாறிக்கொண்டே இருந்ததால் எந்த அரசாலும் முழுதாய் முடிக்கப்பட முடியவில்லை.

 

மெட்ரோ ரயில் திட்டம் கூட இப்படித்தான் பல வேளைகளில் தாமதாகி இருந்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் வந்த பெருவெள்ளத்துக்கு பிறகு, தண்ணீர் வீண் ஆனதும் இல்லாமல், வீடுகளுக்குள் புகுந்து உயிர் குடித்தது. இதில் ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாட்டை வெள்ள நீர் பார்க்கவில்லை. பாரபட்சமின்றி பலரது வீட்டுக்குள்ளும் நுழைந்தது. இதற்கு பின்னரே, நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு சென்னைக்கு வந்தது.

 

ஆனால், சென்னை வெள்ளத்தின்போதே பலர், ‘2015லிருந்து 3 வருடங்களுக்கு பிறகு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு’ வரும் என கணித்திருந்தனர். அதன் போலவே தற்போது சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் உண்டாகியுள்ளது. சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் இருக்கின்றன.

 

இவற்றில் 4 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். ஆனாலும் நீர் மேலாண்மையை செய்ய தவறியதால், தற்போது ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து, 1,259 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளதாக அறியப்படுகின்றன. இந்த தண்ணீர் விகிதம் மொத்த கொள்ளளவில் 11 சதவீதம்தான் என்பதால் சென்னையில் அடுத்த சில மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Tags : #TAMILNADU #CHENNAI