தாகத்தில் தவித்த கோலா கரடிக்கு உதவும் பெண்.. நெஞ்சை உருக்கும் மனிதநேயம்..வைரல் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 02, 2019 02:54 PM
நம்மூரில் டிசம்பர் மாதம் முன்பனிக்காலம் என்றால், ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அப்படியே இதற்கு நேர்எதிரான பருவச் சூழல் நிலைகொண்டிருக்கும். ஆம், அங்கே டிசம்பரில் வெயில் பிளந்து கொண்டிருக்கிறது. ஏறக்குறைய இந்த மாதத்தை ஆஸ்திரேலியாவின் கொடும் கோடைக்காலம் என்று சொல்லலாம்.
இந்த காலக்கட்டத்தில் நீர்நிலைகள் வற்றிப்போனதால் தண்ணீரின்றி தவிக்கும் பல வகையிலான உயிரினங்கள் காட்டுப் பகுதிகளில் இருந்து நீர் நிலைகள் இருக்கும் பகுதிகளான மனித வாழ்விடங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. அப்படி தண்ணீருக்குத் தவித்த, கோலா கரடிக்குட்டி ஒன்று, ஆஸ்திரேலியாவின் முக்கியமான நகரச் சாலைக்குள் வந்துள்ளது.
அவ்வழியே வந்த பெண் ஒருவர் அந்த கரடியின் பரிதவிப்பை பார்த்ததும் மனம் கேட்காமல், காரில் இருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு இறங்கி, கோலா கரடியிடம் செல்கிறார். அந்த பெண்மணியை பார்த்ததும், அந்த கோலா கரடி மரத்தில் ஏறிக்கொள்கிறது.
அந்த பெண்மணி, தான் கொண்டுவந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை கரடிக்கு ஊட்டுகிறார். அந்த கரடியும் மரத்தில் இருந்தபடி பாட்டிலில் வாய்வைத்து தண்ணீரை குடிக்கிறது. ஒருவர் இதனை காரில் இருந்தபடி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் மனித நேயம் மிக்க அந்த பெண்மணியை பலரும் பாராட்டி வருகின்றனர். அழிந்து வரும் உயிரிகளுள் ஒன்றான கோலா கரடி ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான சின்னமாக கருதப்பவது குறிப்பிடத்தக்கது.