விஜய் மல்லையா: முக்கிய முடிவை எடுத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம்!
Home > News Shots > தமிழ்By Selvakumar | Feb 05, 2019 11:25 AM
வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடனில் சிக்கித்தவித்த போது 13 பொதுத்துறை வங்கிகளில் இருந்து விஜய் மல்லையா 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வங்கிய கடனைத் திருப்பி செலுத்தாததால் கடந்த 2015 -ஆம் ஆண்டு விஜய் மல்லையாவின் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதனை அடுத்து விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து முயற்சித்து வந்தன. மேலும் இந்தியாவைச் சேர்ந்த 13 வங்கிகளின் கூட்டமைப்பின் சார்பில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க உலகளாவிய உத்தரவைப் பிறப்பித்தன.
இதனை இங்கிலாந்தில் பதிவு செய்ததை அடுத்து விஜய் மல்லையா இதை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையிட்டார். ஆனால் லண்டன் நீதிமன்றம் மல்லையாவின் மேல் முறையீட்டை ஏற்க மறுத்து அவரது சொத்துக்களை முடக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இதை எதிர்ந்து மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு கடத்தும் அனுமதியை எதிர்த்து விஜய் மல்லையா மீண்டும் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.