தஞ்சை அருகே விபத்தில் தாயை பிரிந்த குடும்பத்தினரின் மனிதநேயம் மிக்க செயல்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 16, 2019 03:39 PM

தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது  56 வயதான மனைவி அமுதா என்பவர் கடந்த ஜனவரி, 11-ஆம் தேதி மாலை சுமார் 6 மணி அளவில், ஒரத்த நாடு அருகே தன் மருமகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் இருவரும் படுகாயமுற்றனர்.

TN - After an accidental death, family of dead person donates organs

ஆனால் விபத்து நடந்த அன்று இரவே சுமார் 10 மணி அளவில், மிகவும் பாதிக்கப்பட்ட அமுதாவும் அவரது மருமகளும், சுய நினைவிழந்த நிலையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் மருத்துவர்களின் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, கடந்த 13-ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் அமுதா மூளைச்சாவு அடைந்துள்ளார்.

பின்னர் அமுதாவின் உறவினர்கள் அளித்த சம்மதம் மற்றும் ஒப்புதலுடன், மீனாட்சி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ குழுவினர்  அமுதாவின் இதயம், நுரையீரல், 2 சிறுநீரகம், 2 கண்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி எடுத்துள்ளனர். இவற்றுள் ஒரு சிறுநீரகம் மீனாட்சி மருத்துவமனையில் உள்ள மற்றொரு நோயாளிக்கு மாற்றி பொருத்தப்பட்டது. மற்ற பாகங்கள் திருச்சி, சென்னை, மதுரையில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. 

(இறந்துபோன) அமுதா என்பவரின் உறவினர் வினோத் குமார் நம்மிடையே பேசும்பொழுது, ‘பெரியம்மாவின் (அமுதா) இந்த இறப்பால் நாங்கள் வாடிப்போய் இருக்கிறோம். அண்ணி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் பேச ஆரம்பித்துள்ளார். அவர் பூரணமாக நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்துவருகிறோம். ஆனால் இறந்துபோன எங்கள் பெரியம்மாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ததால், மேற்கொண்டு 7 பேர் மறுவாழ்வு பெறுவார்கள் என்பதால் இத்தகைய மனிதாபிமானமிக்க செயலுக்கு உறவினர்களாகிய நாங்கள் ஒப்புதல் அளித்தோம்’ என்று கூறினார். 

மேலும் பேசியவர், ‘மற்றவர்களுக்கும் இதுபோன்ற உணர்வு தோன்ற வேண்டும். நம் அன்புக்குரியவர்களை நாம் துரதிர்ஷ்டவசமாக இழந்துவிடுகிறோம், ஆனால் மற்றவர்களின் அன்புக்குரியவர்களை காப்பாற்ற வாய்ப்பிருப்பின் அவர்களினூடே நமது அன்புக்குரியவர்கள் பூவுலகில் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்’ என்று கூறி நெகிழ்ந்துருக வைத்தார்.

Tags : #ACCIDENT #TANJURE #ORATHANADU