சென்னை மக்களை சோகத்தில் ஆழ்த்திய ‘5 ரூபாய்’ டாக்டரின் மரணம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 19, 2018 03:59 PM
சென்னையில் 48 வருடங்களாக அனைவருக்கும் 5 ரூபாய்க்கு மருத்துவம் அளித்து வந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் இன்று அதிகாலையில் காலமானார். சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்துக்கு அருகில் உள்ள கொடைப்பட்டினத்தில் பிறந்தவர் ஜெயச்சந்திரன். பிறந்த ஊரின் பெயரைப் போலவே கொடை உள்ளம் கொண்ட ஜெயச்சந்திரன் தொடக்கத்தில் 2 ரூபாய்க்கும், பிற்காலத்தில் 5 ரூபாய்க்கும் குறைவில்லாமல் மருத்துவம் அளித்து வந்தவர்.
தான் பிறந்த ஊரில் மருத்துவம் இல்லாததால் பல உயிர்களை கண்முன்னே இழந்ததை பார்த்த ஜெயச்சந்திரன் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு மருத்துவம் படித்தார். நண்பர்களின் உதவியுடன் மருத்துவம் படித்த பின், சென்னையில் சிறிய கிளினிக் ஒன்றை தொடங்கினார். 24 மணி நேரமும் மருத்துவ சேவை வழங்கும் இவருடைய கிளினிக்கில் மொத்த கட்டணமே 5 ரூபாய்தான். ஒரு அரசாங்க மருத்துவமனைக்கு நிகரான தனி மருத்துவமனையை தனி ஆளாய் நடத்தியுள்ளார்.
ஏழை எளிய மக்கள், முதல் பணக்காரர்கள் வரை பலரும் இவரிடத்தில் மருத்துவம் பார்த்ததுண்டு. கட்டணமெல்லாம் யாரால் என்ன கொடுக்க முடிகிறதோ அவ்வளவுதான். அவற்றையும் மருந்துகளாகவே வாங்கித்தரச் சொல்லும் பாணி இவருடையது. சென்னை வண்ணாரப் பேட்டை, ராயபுரம் மக்களிடையே 5 ரூபாய் டாக்டர் என்றால் பிரலபமான இவரை வைத்தே மெர்சல் படத்தில் விஜய் நடித்த கேரக்டர் சித்தரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜெயச்சந்திரனுக்கு வேணி என்கிற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். குடும்பத்தில் அனைவரும் மருத்துவர்கள்தான். ஆகையால் மனைவியின் வருமானத்தில் குடும்பம் ஓட, இவர் தன் இறுதி நாள்வரை தன் சேவையை தொடர்ந்துள்ளார். 70 வயதைத் தொட்ட ஜெயச்சந்திரன் இன்று மாரடைப்பால் காலமானதால்,அவர் கை பட்டாலே நோயெல்லாம் சிட்டாக பறந்துவிடும் என்று அவரிடம் பிரியமாக மருத்துவம் பார்க்க வரும் அத்தனை மக்களும் பிரியாத் துயரில் மூழ்கியுள்ளனர்.