இனி அத்தியாவசிய பொருட்களும் ஆன்லைனில்.. உணவு டெலிவரி நிறுவனம் அதிரடி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Feb 12, 2019 07:44 PM
ஸ்விக்கி தனது வாடிக்கையாளர்களை மேலும் குஷிப்படுத்த, உணவுப் பொருட்களைத் தொடர்ந்து மளிகை, சூப்பர் மார்க்கெட் பொருட்களை ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யத் துவங்கியிருக்கிறது.
நகரங்களில் மிக வேகமான நேர சூழ்நிலையால் பலருக்கு சமைத்து சாப்பிட முடியாத நிலையும், ஹோட்டலுக்கு சென்று சாப்பிட முடியாத நிலையும் உருவான நிலையில் இருக்கும் இடத்தில் இருந்து ஆர்டர் செய்து உணவுப் பொருட்களை பெறும் வகையில் 2014-ம் ஆண்டில் ஸ்விக்கி ஆப் பலரின் கவனத்தையும் தன்வசம் இழுத்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்களின் வரவு அதிகரிக்க ஸ்விக்கி நிறுவனம் இந்தியா முழுக்க 80-க்கும் மேலான நகரங்களில் தனது சேவையை விரிவுப்படுத்தியது.
மேலும், 60,000க்கும் மேற்பட்ட உணவு விடுதிகளை பார்ட்னர்களாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்விக்கி நிறுவனம் தற்போது அடுத்த கட்டமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் டெலிவரி செய்ய முடிவு எடுத்திருந்தது. அதனை முன்னிட்டு இன்று ஸ்விக்கி ஸ்டோர்ஸ் என்ற ஆப்பினை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பின் உதவியுடன் அன்றாட மக்களின் தேவைகளான பூ, பழம், காய்கறிகள் முதல் மருந்து போன்ற பொருட்களையும் இன்ன பிற சூப்பர் மார்க்கெட் பொருட்களையும் வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடி பெற்றுக்கொள்ள இயலும்.
இன்று முதல் புழக்கத்துக்கு வந்த இந்த ஆப்பின் சிறப்பினை பற்றி ஸ்விக்கி நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீஹர்ஷா மெஜெட்டி பேசும்போது, வாடிக்கையாளர்களின் சேவையினை கருத்தில் கொண்டு இந்த ஆப்பில், பல்வேறு மளிகை, சூப்பர் மார்க்கெட்கள், மருந்து கடைகளின் முழு விவரங்களையும் முழுமையாக பெறக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.