யூபர் ஈட்ஸை வாங்கப் போகிறதா பிரபல உணவு டெலிவரி நிறுவனம்?
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Feb 22, 2019 05:33 PM
அமெரிக்காவின் முக்கியமான ஆன்லைன் கால்-டாக்ஸி நிறுவனம் யூபர். முதலில் கால்-டாக்ஸி சேவையைத் தொடங்கிய இந்நிறுவனம், மெல்ல பல நாடுகளுக்கு தன் கிளையை விரித்தது.
ஆனால், கால் டாக்ஸிக்கு பிறகு யூபர் நிறுவனத்தின் மற்றுமொரு தவிர்க்க முடியாத சேவையாக மாறிப்போனது உணவு டெலிவரி. இதற்கென இதே ஆப்பின் உணவு டெலிவரி ஆப் வடிவமாக வெளிவந்தது யூபர் ஈட்ஸ். வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவை ஆர்டரின் பேரில் விரைவாக அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று சேர்க்கும் இந்த யூபர் ஈட்ஸ் நிறுவனமும் தனது கிளைகளை உலக நாடுகள் முழுவதும் விஸ்தீரணப்படுத்தியது.
இப்படி யூபர் டாக்ஸி யூபர் ஈட்ஸ் என்கிற பெயரில் உணவு டெலிவரி செய்வதுபோலவே, பிரபல கால் டாக்ஸி நிறுவனமான ஓலா, ஃபுட் பாண்டா என்கிற பெயரில் உணவு டெலிவரி செய்கிறது. ஆனால் பல நாடுகளிலும் யூபர் ஈட்ஸ் மலிந்து வருவதால், ஆங்காங்கே உள்ள தன்னுடைய நேரடி போட்டியாளர்களிடம் சமரசம் செய்துகொண்டு யூபர் ஈட்ஸினை கைமாற்றுவதென யூபர் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டா இரண்டுமே யூபர் ஈட்ஸினை கைப்பற்ற போட்டியிட்டு வருவதாக தெரிகிறது. என்னதான் யூபர் ஈட்ஸ் தன்னுடைய போட்டி நிறுவனமான ஃபுட்பாண்டாவை விட அதிக உணவு டெலிவரிகளை செய்தாலும் (சுமார் 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம் டெலிவரிகள்), ஸொமாட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் 5 முதல் 10 லட்சம் வரை உணவு டெலிவரி செய்கின்றன. அதனால் அதிகபட்சமாக ஸ்விக்கி நிறுவனமே யூபரை கைப்பற்றுவதற்கான முழுமையான வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. எனினும் இவை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.