'போலி PAY TM-ஐ பயன்படுத்தி 30,000 ரூபாய் பணமோசடி'.. கல்லூரி மாணவர்கள் கைது!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 12, 2018 01:05 PM
சென்னை துரைப்பாக்கத்தின் அருகே உள்ள ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படித்து வந்த பெங்களூரைச் சேர்ந்தவர் கிரண், அதே பகுதியில் 2-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்தவர் ஸ்டெல்லி. அதே பகுதியில் சரவணா சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் வேல்ராஜின் சூப்பர் மார்க்கெட்டில், பொருட்களை வாங்கிக்கொண்டு அதற்கு பணம் செலுத்துவதற்கு பதில் PAYTM-ல் செலுத்துவதாக இம்மாணவர்கள் கூறியுள்ளனர்.
அதை நம்பி ஆண்ட்ராய்டு ஆப்’ மூலம் பணம் செலுத்த அனுமதித்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு பின்னாளில்தான் அதிர்ச்சி காத்திருந்தது. எல்லா உணவு பொருட்களையும், வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கிய மாணவர்கள் தொடர்ந்து ஆப் எனப்படும் செயலி மூலம் பணம் செலுத்துவதாக கூறி தங்களிடம் இருந்த SPOOF PAYTM என்கிற ஆப்’பை பயன்படுத்தி பணம் செலுத்தியது போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆனால் மாணவர்கள் ஆப்’பின் மூலம் பணம் செலுத்தியது போல, சூப்பர் மார்கெட் உரிமையாளரின் கணக்கில் பணம் ஏறியிருப்பது போல, அவரது அப்ளிகேஷனில் ‘டிக்’ மார்க் காண்பித்திருக்கிறது. ஆனால் மாணவர்கள் பணம் செலுத்தியவுடனே அவர தனது வங்கிக் கணக்கை சோதனை செய்யவில்லை. எனினும் பணம் ஏறாததை ஒரு முறை கண்டுபிடித்துவிட்ட, ஓனர் மாணவர்களை அழைத்து கேட்க, அவர்கள் ஏதேதோ சொல்லி மழுப்பிக்கொண்டிருக்க, அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பின்னர் அதே சூப்பர் மார்க்கெட்டில் வேல்ராஜிடம் இருந்து 5000 ரூபாய்க்கு, மாணவர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த சமயத்தில் தான் போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.
விசாரித்ததில் வேல்ராஜின் சூப்பர் மார்க்கெட்டில் மட்டும் இந்த போலி ஆப்பை பயன்படுத்தி 30 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதும், இன்னும் பல சிறிய கடைகளில் இதே ஆப்பை பயன்படுத்தி பண மோசடி செய்துள்ளதும் வெளிவந்தது. இந்நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.