இன்ஜினியரிங் படிப்புக்கு என்னதான் ஆச்சு.. 1 லட்சத்துக்கும் மேல் காலி இருக்கைகள்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 25, 2018 12:35 PM
இந்த நூற்றாண்டின் இணையற்ற படிப்பாக ஒரு காலத்தில் துவங்கியது பொறியியல் படிப்புகள். கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகள் சுமாரான மாணவனுக்கும், மருத்துவ படிப்பு மிக நன்றாக படிக்கும் மாணவனுக்கும் என்றால் இடையில் இருக்கும் சராசரி மாணவனுக்கு நேர்ந்துவிடப்பட்டது பொறியியல் படிப்புகள்.
விவசாயக் குடும்பங்கள் கூட வங்கிகளில் கடனை வாங்கி கடந்த பத்து வருடங்களில் அதிகமாக பொறியியல் பட்டதாரிகளாக தங்கள் வீட்டு பிள்ளைகளை உருவாக்க ஆசைப்பட்டார்கள். அதைப் போலவே, அந்தந்த பொறியியல் கல்லூரிகளும், கல்லூரி வடிவமைப்பு, வேலைவாய்ப்பு, கருத்தரங்கங்கள் என போட்டி போட்டுக்கொண்டு மாணவர்களை வருடா வருடம் உற்பத்தி செய்து தள்ளின.
நான்கு கிரவுண்டு காலியாக இருந்தால் உடனடியாக இரண்டு தளத்தை கட்டி முதல் வருட மாணவர்களின் அட்மிஷன் தொகையை வைத்து அடுத்தடுத்த தளங்களை கட்டி மாணவர்கள் நான்கு வருட படிப்பினை முடிக்கும்போது, ஒரு பொறியியல் கல்லூரியை நடத்துவதற்கு கற்றுக்கொண்டுவிடும் பல பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இவர்களில் பாதிக்கு பாதி பேர் படித்த துறையில் பணிபுரியாமல், பலர் கலைக்கல்லூரி மாணவர்களுக்கும், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் போட்டியாக குரூப்-4, விஏஓ தேர்வுகளை எழுத பயிற்சி எடுக்கின்றனர். பலர் அந்த வேலைகளில் அமர்ந்துமிருக்கின்றனர்.
வேலையில்லா பட்டதாரி, நண்பன் போன்ற திரைப்படங்கள் கூட பொறியியல் படிப்பு மற்றும் அதுசார்ந்த வேலைகளைப் பற்றி பேசுவதால் மாணவர்கள் இன்னும் விழிப்படைகின்றனர். இதன் விளைவாக எல்லாரும் படிக்கிறார்கள்; கவுரவத்திற்கு படிக்க வேண்டும் போன்ற விஷயங்களை பலரும் தவிர்த்து வருகின்றனர்.
இதன் விளைவாக, இந்த ஆண்டு தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கவுன்சிலிங் விபரப்படி, 72,648 மாணவர்கள் மட்டுமே (கவர்மெண்ட் கோட்டாவில்) பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். மூன்றில் ஒரு பங்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் குறைந்தபட்சம் 50 இருக்கைகள் கூட நிரம்பவில்லை என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
இதே சமயம், படித்து முடித்து வேலைக்கு போக வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல், தரமான, செயல்முறை வடிவிலான பொறியியல் படிப்பின் அத்தியாவசியம் இங்கு உள்ளதுஎன்பதும், இன்னும் பெரும்பாலான பொறியியல் கட்டமைப்புகளுக்கும், தயாரிப்புகளுக்கும் இந்தியா வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.