‘அவர் என் சகோதரி’.. துப்பட்டா சம்பவம் பற்றி சித்தாராமையா அதிரவைக்கும் ட்வீட்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 29, 2019 03:21 PM

கர்நாடகாவின் மைசூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒன்றில் கட்சி சார்பாக, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான சித்தராமையா கலந்துகொண்டார்.

\'she is like my sister\', siddaramaiah explains about recent incident

அந்த சமயம் அந்த கூட்டத்துக்கு வந்த பெண்மணி ஒருவர் சித்தாராமையாவிடம், ‘எம்.எல்.ஏவாக இருக்கும் உங்கள் மகன் யாதிந்த்ராவை சந்திக்கவோ எங்கள் தொகுதி பிரச்சனைகளை பற்றி தொடர்புகொண்டு  பேசவோ முடிவதில்லை, காரணம் அவர் இந்த தொகுதி பக்கமே வருவதில்லை; ஆனால் அவர் இந்த தொகுதியில்தானே நின்று வெற்றி பெற்றார்?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அப்போது அந்த பெண்மணியை உட்கார்ந்து பேசச்சொன்ன சித்தாராமையா, அவரிடம் தன்னை அலுவகலத்தில் வந்து சந்தித்து குறைகளை பேசும்படி கூறியுள்ளார். ஆனால் அந்த பெண்மணி, தொடர்ந்து ஆக்ரோஷமாக சித்தாராமையாவின் மேஜை அருகே வந்து நின்று மைக்கில் கோபமாக பேசியுள்ளார். இதனை சற்றும் விரும்பாத சித்தாராமையா, ‘நீங்கள் எத்தனை முறை என்னை அலுவலகத்தில் வந்து சந்தித்துள்ளீர்கள்? நான் ஒவ்வொரு முறையும் உங்களை பார்க்க வருகிறேன் என்று தகவல் அளித்துவிட்டு வரமுடியாது, நீங்கள்தான் என்னை வந்து சந்திக்கமுடியும்’ என்று பேசிக்கொண்டே அந்த பெண்மணியின் மைக்கை பிடித்து இழுத்துள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மைக்குடன் சேர்ந்து துப்பட்டாவும் கையில் வந்துவிட்டது. இதனையடுத்து, ‘பெண்மணியின் துப்பட்டாவை பிடித்திழுத்த கர்நாடக முன்னாள் முதல்வர்’ என்று சிறிது நேரத்தில் இணையத்தில் செய்திகள் காட்டுத்தீபோல் பரவின. ஆனால் உண்மையில் அந்த பெண்மணியோ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் அப்பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக நிறைய பொறுப்புகளை வகித்தவர் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி பேசிய அந்த பெண்மணி, ‘சித்தாரமையா ஒரு நல்ல முதல்வராக இருந்தவர். அவர் அவ்வாறு செய்தது என்னை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. நான் உணர்ச்சிவசப்பட்டு அதிகம் பேசிவிட்டேன். அதனால் அவருக்கு கோபம் வந்தது அவ்வளவுதான். மற்றபடி அவரது மகன் வரும்போது எங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்டவர்கள் எனக்கு தகவல் தெரிவிப்பதே இல்லை என்கிற புகாரை நான் அவ்வளவு ஆக்ரோஷமாக சொல்லியிருக்க வேண்டியதில்லை’ என்று தெரிவித்தார்.

இதே விஷயத்தை பற்றி கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தாராமையா, ‘எங்கள் கட்சியை சேர்ந்த அந்த பெண்மணி கட்சி கூட்டத்தில் வெகுநேரம் பேசியதைத் தடுக்கும்பொருட்டு நான் முயன்றபோது நடந்த விபத்துதான் அந்த சம்பவம். மற்றபடி அந்த பெண்மணியை எனக்கு 15 வருடங்களாக தெரியும், அவர் எனக்கு சகோதரி போன்றவர்’ என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags : #INCKARNATAKA #SIDDARAMAIAH #BIZARRE #VIRAL