‘ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடி மின் இணைப்பு’ வழங்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Home > News Shots > தமிழ்By Selvakumar | Jan 24, 2019 03:50 PM
ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தை தொடர்ந்து, ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் சார்ப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் அதனை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவிப்பதாக, வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தராத தமிழக அரசின் மீது உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மின்விநியோகம் வழங்குவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.