நள்ளிரவில் வீட்டிற்கு வந்த போலீஸ்?: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 09, 2018 11:03 AM
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய காவல் துறையினர் அவர் வீட்டுக்கு சென்றுள்ளதாக ஒரு பரபரப்புத் தகவலை சன் பிக்சர்ஸ் தனது அலுவல் ரீதியான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக சர்கார் படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கச் சொல்லி அரசியலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சன் பிக்சர்ஸின் இந்த ட்வீட் அனைவரிடையே கவனம் பெற்றது. எனினும் காவல் துறையினர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு பாதுகாப்பு அளிக்க வந்தார்களா அல்லது அவர் மீதான கைது நடவடிக்கையா என்பன போன்ற சந்தேகக் கேள்விகள் எழுந்தன. தொடர்ந்து அடுத்த ட்வீட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் இல்லை என்றுச் சொல்லி போலீசார் திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நள்ளிரவு தன் வீட்டுக்கு காவல் துறையினர் வந்ததாகவும், தன் வீட்டுக் கதவை தட்டிப் பார்த்துவிட்டு, தான் இல்லை என முடிவு செய்துகொண்டதாகவும், தற்போது தன் வீட்டு வெளியில் காவலர்கள் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இதே சமயம் நடிகர் சங்க பொதுச் செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தலைமையிலான அலுவல் ரீதியான தயாரிப்பாளர் சங்க ட்விட்டர் பக்கத்தில், ‘இயக்குனர் முருகதாஸ் வீட்டில் காவல் துறையினரா? தாகத நடவடிக்கை ஏதுமில்லை என நம்புகிறோம். தணிக்கைக் குழு திட்டவட்டமாக தணிக்கை செய்யப்பட்ட படம் மக்களால் பார்க்கப்பட்டுள்ளபோது எதற்காக இந்த அழுகை ஆர்ப்பாட்டம்’ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.