"புதிய சாதனை படைத்த ரோஹித்"...அசத்தலான வெற்றியை பெற்ற இந்தியா!
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 22, 2018 10:19 AM
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்டிலும் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கவுஹாத்தியில் நடந்தது.இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது.323 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
அறிமுக வீரர் தாமஸ் முதல் ஓவரை வீச,அதிரடி வீரர் தவான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.இதையடுத்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதற விட்டார்கள்.ரோஹித்,விராட் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது.
88 பந்துகளில் 36வது சதத்தைப் பூர்த்தி செய்த விராட் கோலி, 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.மறுமுனையில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மாவும் சதமடித்து அசத்தினார்.இந்நிலையில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் ஷர்மா, 152 ரன்களுடனும் அம்பாதி ராயுடு 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்தப் போட்டியில் 152 ரன்கள் குவித்த ரோஹித் ஷர்மா, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 150க்கும் அதிகமான ஸ்கோரை அதிகமுறை கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதன்முலம் சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா,ஒருநாள் போட்டிகளில் 6 முறை 150க்கும் அதிகமான ஸ்கோரைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.