நான் ஏன் விலகினேன்? : தந்தி டிவியின் முன்னாள் தலைமை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே விளக்கம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 11, 2018 01:31 PM
தந்தி டி.வியின் தலைமை செய்தியாளர் பதவியில் இருந்த ரங்கராஜ் பாண்டே திடீரென விலகியுள்ள செய்தி பரவலாகி வந்த நிலையிலும், அந்த தகவல் பற்றிய உண்மைத் தன்மையை அறியாமல் பலரும் இருந்துவந்த நிலையிலும், அவரே முன்வந்து, தான் விலகியதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், ‘நான் விலகியதற்கு எவ்வித பிரச்சனையும், நிறுவனங்களும் காரணம் அல்ல. நான் பணிபுரிந்த சூழலில் என்னை ராஜா மாதிரிதான் பார்த்துக்கொண்டார்கள். எல்லா நிறுவனங்களும் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கவே செய்யும். என் விலகல் முடிவை அவை நிச்சயமாக பாதிக்கவில்லை. தொடர்ச்சியாக செய்யும் ஒரு வேலையில் உண்டான அயர்ச்சி காரணமாக, வேறொரு பயணத்தை துவங்க நினைத்து நான் தெளிவாகவும் நீண்ட நாள் யோசித்தும் எடுத்த முடிவுதான் இது’ என்று கூறினார்.
மேலும், ‘ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அதே இடத்தை நீண்ட நாள் தக்கவைத்துக்கொள்ளும்போது, அடுத்து வருபவர்கள் தேங்கி நிற்கக்கூடிய எதார்த்த சூழலும் இருக்கிறது. அதனால்தான் நான் 2 வருடங்களாக தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்காமல் இருந்தேன். வளரும் தலைமுறைகள் ஏற்றம் பெறும் வாய்ப்புக்கு இடம் தரலாம் என்கிற முயற்சிதான். என் விலகல் முடிவை பற்றி தந்தி பாலசுப்ரமணியம் அய்யாவிடம் சொல்லும்போதும், அவர்கள் புரிதலோடு ஏற்றுக்கொண்டார்கள்’ என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், ‘நீயே பிராண்ட்’தான் பாண்டே என்று அய்யா கூட சொன்னார்கள். ஆக என் விலகலில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனாலும் ஒரு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறேன். இந்த ரிஸ்க் எந்த மாதிரி எனக்கு உதவப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நான் கடவுளையே நம்பி இதை எடுத்திருக்கிறேன். மக்களாகிய நீங்கள்தான் எனக்கு மிகவும் உறுதுணை. உங்களை நான் இழக்க போவதில்லை. உங்களின் துணையோடு தொடர்ந்து இதே மீடியாவில் இருப்பேன்’ என்றும் அந்த வீடியோவில் கூறினார்.