குளத்துக்குள் குருவாயூர் கோவில்: இடுப்பளவு தண்ணீரில் வழிபடும் கேரள மக்களின் வைரல் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 11, 2018 06:16 PM
தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், கனமழை எதிரொலி காரணமாக திறந்துவிடப்பட்ட இடுக்கி அணையினாலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் கேரளா, தற்போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அண்டை மாநிலங்கள் பலவும் கேரளாவிற்கு நிதி உதவி அளித்து வருகின்றன. வெள்ளத்தால் ஒரு பக்கம் மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரையும் உடமைகளையும் இழுந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு இடையில் இன்னொரு பக்கம் மனம் தளராத கடவுள் பக்தி இருக்கும் கேரளாவின் இன்னொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது.
கேரளாவில் உள்ள குருவாயூர் கோவில் மிகவும் பிரபலம். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் வழிபாடுகளும் சிறப்பு பூஜைகளும் நடந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் அலைமோதும் இந்த கோவில் தற்போது மழையின் காரணமாக குளமாகவே மாறியுள்ளது. இருப்பினும் குருவாயூர் அப்பா மேலிருக்கும் தீராத பக்தியினால் கேரள சேட்டன்களும், சேச்சிகளும் இந்த வெள்ள நாளில் கூட கோவிலுக்கு சென்று வழிபட்டுவரும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பெரியவர்கள் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என பலதரப்பட்ட மக்கள் குருவாயூர் கோவிலுக்கு சென்று, இடுப்பளவு தண்ணீரில் நின்று தரிசனம் பெறும் இந்த வீடியோ காட்சிகள் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன. உண்மையில் இத்தனை பெருமழை வந்தும் தங்களை காத்ததற்காக இந்த பக்தர்கள் நன்றி சொல்லுகிறார்களா? இல்லை, மேற்கொண்டு கனமழையை நீடிக்கச் செய்யாமல் நிறுத்த சொல்லி குருவாயூர் மூலவரிடம் வேண்டுகிறார்களா? என்பன போன்ற கேள்விகள் ஒருபுறம் எழுகின்றன.
அதேசமயம், இந்த வீடியோவைப் பார்க்கும் இணையவாசிகள், ”கோவிலுக்குள் இருக்கும் குளத்தை பார்த்திருக்கிறோம். குளத்துக்குள் இருக்கும் கோவிலுக்குள் மூழ்கி மகிழும் பக்தர்களின் மேல் சொட்டுச்சொட்டாய் வழிவது தண்ணீர் மட்டுமல்ல, அவர்களின் பக்தியும்தான்” என்று 'கமெண்ட்’டுகின்றனர்.