‘இவ்வளவு பெரிய பணக்காரர் வரிசையில் நின்னது இதுக்காகவா?’.. வைரலாகும் ஃபோட்டோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 20, 2019 11:37 AM
உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு பெரும் பணக்காரர் சாதாரணமாக பொது இடத்தில் வரிசையில் நிற்கிறார் என்றாலே நம்மால் நம்ப முடியாது. அதிலும் அவர் நின்றது ஒரு பர்கருக்காக என்றால் அவ்வளவுதான் கண்ணால் பார்த்தால் கூட நாம் நம்புவது சிரமம்தான். அப்படியான சம்பவம்தான் நடந்துள்ளது அமெரிக்காவில்.
அமெரிக்காவின் வாஷிங்டன்னுக்கு உட்பட்ட சியாட்டல் நகரில் உள்ளது பர்கர் மாஸ்டர் டிரைவ் இன். இங்குதான் பில்கேட்ஸ் எனும் பர்கர் பிரியரை அவ்வப்போது காண முடியும் என்கிறார்கள். இங்கு கடந்த ஞாயிறு அன்று 63 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் சிம்பிளான உடை அணிந்து வரிசையில் நின்றுகொண்டிருந்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் முதன்மை நிறுவனர் பில்கேட்ஸ் ஒரு சாதாரண உடை அணிந்து மக்களோடு மக்களாக வரிசையில் எதற்கோ நின்றுகொண்டிருப்பதை தட்டென பலரும் கவனிக்கவில்லை. அவர் பில்கேட்ஸ் என்று உணரவே அங்கிருந்த சிலருக்கு ஒரு விழிப்புணர்வு தேவைப்பட்டது. அதை உணர்ந்த கணம் அங்கிருந்த சிலரின் பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இத்தனைக்கும் அந்த மனிதர் நின்றது ஒரு பர்கருக்காகத்தான்.
மைக் க்ளோஸ் என்பவர்தான், பரவசம் தாங்க முடியாமல், பர்கர் பிரியர் பில்கேட்ஸ் பர்கருக்காக வரிசையில் காத்திருந்த அரிய நிகழ்வினை ஒளிப்படமாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த படம் வைரலாகியுள்ளது. தொடர்ந்து பல வருடங்கள் உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரராக இருந்த பில்கேட்ஸ் தனது சொத்துக்களில் பெரும் பகுதியை அறக்கட்டளைகளுக்கும், எளிய மக்களுக்கும் கொடுத்தவர்.
எனினும் இன்றும் 95 பில்லியன் சொத்துக்களுடன் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளவர். ஆனால் அவரிடம் பணத்தைத் தாண்டிய பண்பும், எளிமையும் பலராலும் கற்றுக்கொள்ளப்பட வேண்டியது என்று சமூக வலைதளங்களில் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.