சுங்கச்சாவடி ஊழியரை இழுத்துப்போட்டு சாவடி அடித்த கட்சி நிர்வாகி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Feb 07, 2019 04:30 PM
நெடுஞ்சாலைகளின் வழியில் இருக்கும் சுங்கச் சாவடிகளில், வாகனங்களுக்கான சுங்க வரிகள் வாங்கப்படும் வேலைகள் எப்போதும் நடந்துகொண்டே இருக்கும். அங்கு பணிபுரிவர்களும் அவ்வப்போது சுழற்சி முறையில் பணிபுரிவதுண்டு.
ஆனால் அந்த ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் தகராறு செய்வது என்பது புதிதல்ல. முன்னதாக கட்சி நிர்வாகி ஒருவர் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவரிடம் தகராறு செய்ததை அடுத்து எழுந்த வாக்குவாதம் காரணமாக வாகனத்தில் இருந்து குடும்பத்தோடு இறங்கி அவ்வழியே வந்துகொண்டிருந்த தொலைதூர பேருந்தில் ஏறிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் சுங்கச் சாவடி ஊழியரை சரமாரியாக தாக்கிய வீடியோ ஒன்று செய்தி தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் உள்ள ஊசுடு தொகுதி செயலாளர் சுகுமார். இவர் புதுச்சேரி எல்லையில் இருக்கும் மொரட்டாண்டி டோல்கேட்டின் வழியே தனது குடும்பத்துடன் காரில் வந்துள்ளார். அப்போது டோல்கேட் ஊழியர் மணிமாறன், காருக்கு செலுத்த வேண்டிய சுங்க வரி அட்டையை கேட்டுள்ளார். சுகுமார் அப்போது கார்டை எடுத்துக் காண்பித்துள்ளார். ஆனால் சுகுமார் காட்டிய மாதாந்திர சுங்கவரி கார்டானது காலாவதி ஆகியதால், அவர் மீண்டும் அதனை புதுப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட சுகுமார் உடனடியாக கோபப்பட்டு டோல்கேட் ஊழியர் மணிமாறனை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலால் பலத்த காயமடைந்த மணிமாறன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தை சிசிடிவி காட்சிகள் கொண்டு பார்வையிட்ட போலீஸார், சுகுமாரையும் அவரது நண்பர்கள் விக்னேஷ், கமலநாத் உள்ளிட்டோரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.