சும்மா விட்டிருந்தா '4 ரன்னோட' போயிருக்கும்.. ரசிகர்கள் கிண்டல்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 13, 2018 05:51 PM
#PAKVSNZ: Pakistan manage 5 runs off 1 Ball

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் பீல்டிங்கைப் பார்த்த, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் சமீபத்தில் மோதின. இதில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால், 3-வது போட்டியை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

 

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 280 ரன்களைக் குவித்தது. ஆட்டத்தின் போது நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் 49-வது ஓவரின் 4-வது பந்தை வீசினார்.இதனை எதிர்கொண்ட பாகிஸ்தான் வீரர் பஹீம் பந்தை சிங்கிள் தட்டிவிட்டு ஓடினார்.

 

மறுபுறம் நியூசிலாந்து வீரர்களின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. இதனைப் பயன்படுத்தி பஹீம், ஆஸீம் இருவரும் தலா 3 ரன்களை ஓடி,ஓடி எடுத்தனர். இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஒருவழியாக நியூசிலாந்து விக்கெட் கீப்பரின் கைக்கு பந்து வந்தது.பந்தைப் பிடித்த விக்கெட் கீப்பர் சும்மா இல்லாமல் எதிர்முனைக்கு பந்தை வீச, போல்ட் அதனை நழுவ விட்டார்.

 

இதனைப் பயன்படுத்தி மீண்டும் 1 ரன்னை பஹீம் எடுத்தார். ஆனால் அத்துடன் இந்த பீல்டிங் காமெடி முடியவில்லை. பதட்டத்தில் மறுமுனையில் நின்ற விக்கெட் கீப்பரிடம் பந்தை வீச, அது மீண்டும் எல்லைக்கோட்டை நோக்கி வேகமாக ஓடியது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பஹீம்-ஆஸீம் கூட்டணி மீண்டும் ஒரு ரன் எடுத்தனர்.

 

அப்புறம் என்ன ஒரே பந்தில் பாகிஸ்தான் அணி சுளையாக 5 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து வீரர்கள் தங்கள் ஓட்டப்பந்தயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சும்மா விட்டிருந்தா 4 ரன்னோட போய் இருக்குமே. ஏன் இப்படி? என சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். 

 

280 ரன்கள் என்ற இலக்கை நோக்கி 2-வதாக நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதில் 6.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை ரன்களை அந்த அணி எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதைத்தொடர்ந்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆட்டம் ரத்தானதால் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர், 1-1 என ட்ராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #PAKISTAN #NEWZEALAND