'இந்தியாவோட நாங்க இருக்கோம்'...தீவிரவாதத்திற்கு எதிராக களமிறங்கியிருக்கும்...பாகிஸ்தான் பெண்கள்!
Home > News Shots > தமிழ்By Jeno | Feb 20, 2019 10:59 AM
தீவிரவாதத்திற்கு எந்த மதமோ அல்லது நாடோ சொந்தம் கிடையாது என்பதனை நிரூபித்து இருக்கிறார்கள் பாகிஸ்தான் பெண்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில்,40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.இந்த தாக்குதல் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.உலக நாடுகள் பலவும் இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டித்தது.இந்த கோர தாக்குதலுக்கு காரணம் நாங்கள் தான் என 'ஜெய்ஷ் இ முகமது' பொறுப்பேற்று கொண்டது.இதனால் பாகிஸ்தானிற்கு வர்த்தக ரீதியாக வழங்கப்பட்ட அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்று கொண்டது.இது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தியா மீதான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும்,ஒரு போதும் நாங்கள் தீவிரவாதத்தை ஆதரித்தது இல்லை எனவும்,#AntiHateChallenge என்ற ஹேஸ்டேக்கை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் பாகிஸ்தான் பெண்கள். ஷேய்ர் மிர்சா என்ற பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் தொடங்கிய இந்த ஹேஸ்டேக்,தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ''இந்திய மீதான தாக்குதல் என்னை மனதளவில் வெகுவாக பாதித்துள்ளது.இந்தியாவில் இருப்பவர்கள் எனது சகோதர சகோதரிகளே.எனவே இந்த நேரத்தில் நாம் அவர்களோடு நிற்க வேண்டும்.அதற்காகவே இந்த ஹேஸ்டேக் உருவாக்கபட்டது.எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதே எண்களின் விருப்பம் என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தற்போது பல பாகிஸ்தான் பெண்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.நான் ஒரு பாகிஸ்தானி.புல்வாமா தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று சேர்வோம்,என எழுதப்பட்ட பதாகைகளுடன் இருக்கும் படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.தற்போது அவர்களின் பதிவு இந்திய நெட்டிசன்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தீவிரவாதத்திற்கு எந்த நாட்டு மக்களும் துணை போகமாட்டார்கள்.பாகிஸ்தானில் இருப்பவர்களும் எங்களது நண்பர்களே என பல நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.