‘ஓரினச்சேர்க்கையாளரா இருப்பது தவறல்ல’.. ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகிய வார்த்தைப் போர்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Feb 12, 2019 04:27 PM
இங்கிலாந்து கேப்டனைப் பார்த்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் இகழ்ந்து பேசிய பேச்சு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அனைவரிடையே பெரும் பரபரப்பையும் உண்டாக்கியது.
எந்த வருடமும் இல்லாத அளவில் இந்த வருடம் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களுடையே வார்த்தைப் போர்கள் நிகழ்வதைக் காண முடிகிறது. ஒருபக்கம் அவை ஜாலியாக, நகைச்சுவையாக கையாளப்படுகின்றன. அதனால் அவற்றால் பெரிய விளைவுகள் ஒன்றும் உருவாவதில்லை. ஆனால் கொஞ்சம் வார்த்தைகள் தடித்துப் போனாலும் அர்த்தங்கள் மாறி, பிறரையும் பிறரின் தேசத்தையும் பிறரின் நிறத்தையும் இழிவுபடுத்துவதுபோல் பொருள் வந்துவிடும்.
இப்படித்தான் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட 3-வது மற்றும் கடைசி போட்டி செயிண்ட் லூசியா நகரில் நடைபெற்றபோது, போட்டியில் பந்தை அடித்தபின், ரன்னுக்காக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஓடியுள்ளார். அப்போது அவர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷானோன் கேப்ரியலைப் பார்த்து ‘ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் தவறில்லை’ என்று பேசியுள்ளார். இந்த பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவானதை அடுத்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதற்கு முன்பாகவே ஷனான் கேப்ரியல் ஜோ ரூட்டிடம் ஏதோ பேசியிருக்கிறார். ஆனால் அது மைக்கில் பதிவாகவில்லை. இதனால் ஷனான் கேப்ரியலை முதலில் அழைத்து கடுமையான முறையில் கள அம்பயர் எச்சரித்துள்ளார்.
ஆக, ஷனான் பேசியதற்கு மறுமொழிதான் ஜோ ரூட் அளித்திருக்க வேண்டும் என அனைவரும் புரிந்துகொண்டனர். எனினும் களத்தில் இப்படியெல்லாம் பேசுவது, அடுத்தவரை இகழ்வது, நிறம் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களை சாடுவது உள்ளிட்டவை ஐசிசி நன்னடத்தை விதிமுறைகளின் பகுதி 2.13-ன் கீழ் நடவடிக்கைக்கு உரியது. இதனால் இருவருமே எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் ஷனான் கேப்ரியல் சொன்னதை ஜோ ரூட் வெளியில் சொல்லவில்லை. ‘கிரவுண்டில் நடப்பதை வெளியில் எடுத்துச் செல்ல தேவையில்லை’ என்று ஜோ ரூட் கூறியுள்ளார். இதனிடையே ஒருவேளை ஷனான் கேப்ரியல் தவறுதலாக ஏதேனும் சொல்லியிருந்தால் அது கவனிக்கப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடைநிலை பயிற்சியாளர் ரிச்சர்டு பைபஸ் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபரஸ் அஹமது, தென்னாப்ரிக்க வீரர் பெலுக்வாயோவைப் பார்த்து நிறவெறியை தூண்டுமாறு இகழ்ந்து பேசியதால் அடுத்தடுத்த 4 போட்டிகளில் விளையாடுவற்கு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ரஸுக்கு ஐசிசி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.