'RR பிரியாணி ஹோட்டலுக்கு ஸ்டாலின் அளித்த உறுதி’..மேலாளரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 02, 2018 02:15 PM
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திமுக செயல் தலைவராக செயல்படும் மு.க.ஸ்டாலின், தனது தந்தையின் சிகிச்சை காரணமாக காவேரி மருத்துவமனையை விட்டு அகலாத சூழலில் இருந்து வந்தார்.
இதற்கிடையில் தான் திமுக உறுப்பினர்கள் யுவராஜ், திவாகர், சுரேஷ் உள்ளிட்டோர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற பிரியாணி ஹோட்டலில் ’பிரியாணி தருமாறு வலியுறுத்தி’ கடை ஊழியர்களை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை அடுத்து மு.க.ஸ்டாலின், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் சம்பவம் நிகழ்ந்த விருகம்பாக்கம் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி ஹோட்டலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். அங்குள்ள கடை மேலாளர், ஊழியர்களுடன் பேசினார்.
அவர் பேசியது என்ன என்பது பற்றி நாம் அந்த ஹோட்டலின் மேலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ’தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் எங்கள் ஹோட்டலுக்கு இன்று மதியம் வருகை தந்தார். திமுக உறுப்பினர்களால் நிகழ்ந்த இந்த சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்தார். கைகலப்பில் உடல் காயம் பட்டிருக்கும் எங்கள் ஊழியர்களை பார்வையிட்டார்.இந்த வேதனைக்குரிய செயலை செய்த நபர்களின் மீதான உறுதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்' என்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்,'' என தெரிவித்தார்.